35 ஆண்டாகியும் ஆட்சிக்கு வர முடியலை மனம் வலிக்கிறது -என ராமதாஸ் வேதனை
35 ஆண்டாகியும் ஆட்சிக்கு வர முடியலை மனம் வலிக்கிறது -என ராமதாஸ் வேதனை
ADDED : ஜூலை 03, 2024 02:35 AM
சென்னை:'கட்சி துவங்கி 35 ஆண்டுகளாகியும் ஆட்சிக்கு வர முடியாததை நினைக்கும் போது மனம் வலிக்கிறது' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
பா.ம.க., தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதம்: ஜூலை 16ம் தேதி, 36வது ஆண்டில் பா.ம.க., அடியெடுத்து வைக்கிறது. கட்சி துவங்கி 35 ஆண்டுகளாகியும், ஆட்சிப் பொறுப்பை அடைய முடியவில்லை என்ற இயலாமையை ஒப்புக்கொள்ளும் போது மனம் வலிக்கிறது.
ஆட்சியில் இருந்த, ஆட்சியில் இருக்கும் கட்சிகளால் கூட சாத்தியமற்ற பல மக்கள்நலப் பணிகளை பா.ம.க., செய்துள்ளது என்ற உண்மையை எதிரிகளால் கூட மறுக்க முடியாது. தமிழக அரசியலின் திசையை தீர்மானிக்கும் சக்தியாக பா.ம.க.,வே திகழ்கிறது.
லோக்சபா தேர்தலில் ஆளுங்கட்சியின் அதிகார, பண பலத்திற்கும் ஈடு கொடுக்க முடியாமல் வெற்றியைத் தவற விட்டோம். மக்களாட்சியில் மக்கள் தான் இறுதி எஜமானர்கள். பா.ம.க.,வின் பணிகளை மக்கள் கவனித்துக் கொண்டிருக்கின்றனர். அதற்கான வெகுமதியை உரிய நேரத்தில் தருவர்.
எனவே, பா.ம.க.,வினர் தொடர்ந்து மக்ககளுடன் இணைந்து வாழ வேண்டும்; மக்களுக்கான கோரிக்கைகளை போராடி நிறைவேற்றித்தர வேண்டும்.
வன்னியர் இட ஒதுக்கீட்டுக்காக, துப்பாக்கி குண்டுகளுக்கு தங்கள் இன்னுயிரை தந்த மண்ணான விக்கிரவாண்டியில், வரும் 10ல் இடைத்தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் பா.ம.க.,வை வெற்றி பெறச் செய்வது தான் தொண்டர்கள் எனக்கு வழங்கும் மறக்க முடியாத பரிசாகும்; அதற்காக காத்திருக்கிறேன்.
இவ்வாறு கூறியுள்ளார்.