ADDED : ஏப் 30, 2024 05:33 AM
சென்னை, : கேரளாவில் பறவை காய்ச்சல் பாதிப்பு பரவி வருவதால், தமிழகத்தில் வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரத்துறை வெளியிட்டுஉள்ளது.
மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு, பொது சுகாதாரத்துறை அனுப்பிஉள்ள சுற்றறிக்கை:
பறவை காய்ச்சலுக்குள்ளான கோழிகள், பிற பறவையினங்களிடம் இருந்து மனிதர்களுக்கு தொற்று பரவ வாய்ப்புள்ளது. அதன் கழிவுகளில் இருந்து மனிதர்களுக்கு எளிதில் பாதிப்பு பரவும்.
காய்ச்சல், தலைவலி, தசைப்பிடிப்பு, இருமல், மூச்சுத் திணறல் போன்றவை, பறவை காய்ச்சலுக்கான அறிகுறிகளாகும். எனவே, கால்நடை துறையுடன் இணைந்து, பறவை காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வகை தொற்றால் பாதிக்கப்படும் பறவைகள் குறித்தும், அதன் வாயிலாக மனிதர்களுக்கு காய்ச்சல் பரவினால், அதுகுறித்த தகவலையும் பொது சுகாதாரத் துறைக்கு தெரிவிக்க வேண்டும்.
தனிநபர் சுகாதாரம் பேணுதல், கை கழுவுதல் குறித்த விழிப்புணர்வை, பொது மக்களுக்கு ஏற்படுத்துதல் அவசியம். பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து, மற்றவர்களுக்கு பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க முகக்கவசம் அணியவும் அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

