ADDED : ஏப் 28, 2024 01:41 AM

சென்னை: 'வேலியே பயிரை மேய்வது போல, போதைப்பொருட்கள் நடமாட்டத்தில், ஆளுங்கட்சி நிர்வாகிகளின் தலையீடு இருப்பது, தமிழகத்தின் சாபக்கேடு' என, அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே நடத்தப்பட்ட வாகன சோதனையில், வெளி மாநிலங்களில் இருந்து, 440 கிலோ குட்கா கடத்தி வந்ததாக, தி.மு.க.,வின் தென்காசி மாவட்ட ஊராட்சி தலைவியின் கணவர் போஸ் கைது செய்யப்பட்டுள்ளார். வேலியே பயிரை மேய்வது போல, போதைப்பொருட்கள் நடமாட்டத்தில், ஆளுங்கட்சி நிர்வாகிகளின் தலையீடு இருப்பது, தமிழகத்தின் சாபக்கேடு.
கடந்த பழனிசாமி ஆட்சியில், குட்கா நடமாட்டம் அதிகம் இருப்பதாக கூறி, சட்டசபைக்கே குட்காவை எடுத்து சென்று குற்றம் சாட்டியவர் ஸ்டாலின். அவர் முதல்வரான பின், குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்கவோ, ஒழிக்கவோ, எந்தவிதமான நடவடிக்கையையும் எடுத்ததாக தெரியவில்லை.
தி.மு.க., நிர்வாகிகள் தொடர்பில் இருப்பதன் வழியாக, ஆளுங்கட்சி ஆதரவுடனே இதுபோன்ற கடத்தல் சம்பவங்கள் நடக்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

