ADDED : ஏப் 04, 2024 06:42 AM

சென்னை : கச்சத்தீவுக்காக உண்மையிலேயே போராடிய ஒரே கட்சி அ.தி.மு.க., தான். இதைப் பற்றி பேச வேறு எந்த கட்சிக்கும் தகுதியில்லை' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறியுள்ளார்.
அவரது சமூக வலைதளப் பதிவு: கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில், அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயப்பிரகாஷுக்கு ஓட்டு சேகரித்தேன். என் தலைமையிலான அ.தி.மு.க., அரசால் வகுக்கப்பட்ட, மின்சார வாகனக் கொள்கையால், 'அதர் எனர்ஜி' நிறுவனமும், போச்சம்பள்ளியில் 'ஓலா எலக்ட்ரிக்' நிறுவனமும் வந்தன.
கடந்த 1974ல் மத்தியில் காங்கிரசும், மாநிலத்தில் தி.மு.க.,வும் சேர்ந்து, கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தன. அதை மீட்கப் போராடியவர் ஜெயலலிதா. இன்றைக்கு பா.ஜ., தலைவர்கள் கச்சத்தீவு குறித்து பேசுகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளாக, இதை கிடப்பில் போட்டுவிட்டு, ஜெயலலிதாவின் தொடர்ச்சியான கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல், தற்போது தேர்தலில் ஓட்டுகள் பெறும் அரசியல் ஆதாயத்திற்காக பேசுகின்றனர்.
நம்முடைய மீனவர்கள் இலங்கை அரசால் கைது செய்யப்படுவது குறித்து நன்கு அறிந்தும், கச்சத்தீவு குறித்து மத்திய அரசு கவலைப்படவில்லை. கச்சத்தீவுக்காக உண்மையிலேயே போராடிய ஒரே கட்சி அ.தி.மு.க., தான். இதைப் பற்றி பேச, வேறு எந்த கட்சிக்கும் தகுதியில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

