ADDED : மார் 26, 2024 09:10 PM
சென்னை:தமிழகம் மற்றும் புதுச்சேரியில், கோடை வெயில் தீவிரம் காட்டி வருகிறது. கடந்த வாரம் டெல்டா மற்றும் தென்மாவட்டங்களில், மூன்று நாட்கள் வரை மிதமான மழை பெய்தது. பின், மீண்டும் வெயில் தீவிரமாகி உள்ளது.
நேற்று மாலை நிலவரப்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக, சேலம் மற்றும் ஈரோட்டில், 39 டிகிரி செல்ஷியஸ்; அதாவது, 102 பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
மேலும், தர்மபுரி, கரூர் பரமத்தி, மதுரை, நாமக்கல், திருப்பத்துார் என, மொத்தம் ஏழு இடங்களில், 38 டிகிரி செல்ஷியஸ்; அதாவது, 100 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப்பம்பதிவானது.
சென்னை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், புதுச்சேரி, 34; கோவை, திருச்சி, தஞ்சாவூர், 37; பாளையங்கோட்டை, 35 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.
இன்று முதல், வரும், 30ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு, தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பில்லை; வறண்ட வானிலை நிலவும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

