ADDED : ஏப் 13, 2024 05:41 AM

சென்னை : வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில், இன்று முதல் இரண்டு நாட்களுக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை:
தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களின் மேல், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, காற்றின் திசையில் மாறுபாடு காணப்படுகிறது. இதே போன்று, குமரி கடலை ஒட்டிய பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இதன் காரணமாக, கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கன மழை பெய்து வருகிறது.
தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில், இரண்டு நாட்களுக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 14, 15ம் தேதிகளில், தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம். பிற மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலை காணப்படும்.
சென்னையில் வானம் மேகமூட்டமாக காணப்படும்; அதிகபட்ச வெப்பநிலை, 36 டிகிரி செல்ஷியசை ஒட்டி பதிவாகும். குமரிக்கடல், மன்னார் வளைகுடாவை ஒட்டிய கடலோர பகுதிகள், தெற்கு கேரள கடலோர பகுதிகளில், மணிக்கு 45 கி.மீ., வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நேற்று மாலை நிலவரப்படி, ஈரோடு, திருப்பத்துார் நகரங்களில் அதிகபட்சமாக 40 டிகிரி செல்ஷியஸ் அதாவது, 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இதற்கு அடுத்தபடியாக, சேலம் 39, கரூர் பரமத்தி, வேலுார், நாமக்கல் நகரங்களில் தலா 38; திருத்தணியில் 37 டிகிரி செல்ஷியசுக்கு மேல், அதாவது 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பநிலை பதிவானது. இவ்வாறு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

