ஐம்பதாயிரமாக குறைக்கப்பட்ட ஐ.டி.கே., மையங்கள்: கிராமங்களில் தொடர வலியுறுத்தல்
ஐம்பதாயிரமாக குறைக்கப்பட்ட ஐ.டி.கே., மையங்கள்: கிராமங்களில் தொடர வலியுறுத்தல்
ADDED : ஆக 27, 2024 01:49 AM
மதுரை : தமிழகத்தில் செயல்படுத்தப்பட்ட இல்லம் தேடி கல்வித் திட்ட (ஐ.டி.கே.,) மையங்கள் எவ்வித அறிவிப்புமின்றி 50 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ள நிலையில் கிராமப்புறங்களில் நீட்டிக்க வேண்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா பேரிடர் காலத்தில் 19 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் தொடக்கக் கல்வியில் மாணவர்களுக்கு கற்றல் இடைவெளியை குறைக்கும் வகையில் இத்திட்டம் நடைமுறைக்கு வந்தது. மாநிலம் முழுவதும் 2 லட்சம் மையங்கள் ஏற்படுத்தி தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டனர். தன்னார்வலர்களுக்கு ரூ. ஆயிரம் ஊக்க சம்பளமாக வழங்கப்பட்டது.
கல்வித் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசும் போதெல்லாம் ஐ.டி.கே., திட்டத்தை பெருமையாக குறிப்பிடுவார்.
இது 'முதல்வரின் கனவுத் திட்டம்' என அழைக்கப்பட்டது. மாலை நேரங்களில் மாணவர்களுக்கு நடத்தப்படும் கற்பித்தல் பணியால் அவர்களின் கற்றல் திறன் அதிகரித்துள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேநேரம் மகளிர் உரிமை தொகை, மாணவர்களுக்கு காலணி அளவிடுதல் உள்ளிட்ட கல்விசார் பணிகளுக்கும் தன்னார்வலர்கள் பயன்படுத்தப்பட்டு வந்தனர். கடைசியாக 1.74 லட்சம் மையங்கள் இருந்த நிலையில் தற்போது 50 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளன.
ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
இத்திட்டத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது இத்திட்டத்தை 2.0 என பெயர் மாற்றப்பட்ட நிலையில் நிதி செலவிடுவதில் ஏற்பட்ட முரண்பாடு தொடர்பாக திடீரென குறைக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. கல்வியில் பின்தங்கிய பகுதிகள், எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் மட்டும் இவை செயல்பாட்டில் உள்ளன. பொருளாதார ரீதியாக பின்தங்கிய, மிகவும் பின்தங்கிய மாணவர்கள் அதிகம் கொண்ட கிராமங்களில் இம்மையங்கள் மூடப்பட்டுள்ளன. நகர்ப்புறங்களில் தேவையில்லை என்றாலும் கிராமப் பகுதிகளில் இத்திட்டத்தை தொடர தமிழக அரசு முன்வர வேண்டும் என்றனர்.