ADDED : ஏப் 16, 2024 08:42 PM
சென்னை:போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் உட்பட ஐந்து பேருக்கு, வரும் 20ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
வெளிநாடுகளுக்கு போதைப்பொருள் கடத்திய வழக்கில், தி.மு.க., முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக், 35, டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது கூட்டாளிகள், சென்னையை சேர்ந்த முகேஷ், 33; முஜிபுர், 34, விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார், 34, சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த சதானந்தம், 45, ஆகியோரும் அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஐந்து பேர் மீதும், மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். ஜாபர் சாதிக்கை ஜாமினில் வெளியே எடுக்கும் முயற்சி தீவிரமாக நடக்கிறது. எனினும், அவர் உட்பட ஐந்து பேர் மீதான நீதிமன்ற காவலை, 20ம் தேதி வரை நீட்டித்து, டில்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

