ADDED : ஜூலை 04, 2024 09:58 PM
சென்னை:சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் பதிவான வழக்கில், அமலாக்கத்துறை கைது செய்ததை எதிர்த்து, போதைப் பொருள் வழக்கில் கைதான ஜாபர் சாதிக், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து போதைப் பொருள் கடத்தியதாக, சினிமா தயாரிப்பாளரும், தி.மு.க., முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக், கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். பின், சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்து, கைது செய்தது. அதற்கான உத்தரவு, கடந்த மாதம் 26ம் தேதி பிறப்பிக்கப்பட்டது.
இதை எதிர்த்து, ஜாபர் சாதிக் தாக்கல் செய்த மனுவில், 'அமலாக்கத் துறை கைது செய்தாலும், 24 மணி நேரத்துக்குள், மாஜிஸ்திரேட் முன் என்னை ஆஜர்படுத்தவில்லை. இது, கைது நடைமுறையை மீறியது போலாகும். எனவே, அமலாக்கத் துறையினரின் கைது சட்டவிரோதமாகிறது. கைது உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.
மனு மீதான விசாரணையை, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வு, இன்றைக்கு தள்ளி வைத்துள்ளது.