லஞ்ச வழக்கில் டிரைவருக்கு விதித்த சிறை தண்டனை ரத்து
லஞ்ச வழக்கில் டிரைவருக்கு விதித்த சிறை தண்டனை ரத்து
ADDED : ஆக 26, 2024 04:24 AM
சென்னை: லஞ்சம் பெற்ற வழக்கில், தாசில்தாரின் தற்காலிக டிரைவருக்கு, சிறப்பு நீதிமன்றம் விதித்த நான்கு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி தாசில்தாராக இருந்த அன்பரசனின் தற்காலிக டிரைவர் வில்லிஸ்.
மேல் முறையீடு
இவருக்கு லஞ்ச வழக்கில் நான்கு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் 1,000 ரூபாய் அபராதம் விதித்து, 2019 பிப்ரவரி 8ல், விழுப்புரத்தில் உள்ள ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், வில்லிஸ் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனு, நீதிபதி விவேக்குமார் சிங் முன் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, ''மனுதாரருக்கு எதிரான புதிய குற்றச்சாட்டில், அரசு தரப்பு சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை செய்ய அனுமதி தரப்படவில்லை.
''லஞ்ச பணம் என அறிந்தும், மனுதாரர் அதை பெற்றார் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. அனுமானத்தின் பேரில், குற்றச்சாட்டு சுமத்த முடியாது. சாட்சியங்களை சரிவர கவனத்தில் கொள்ளாமல், சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனவே, அதை ரத்து செய்ய வேண்டும்,'' என்றார்.
அரசு தரப்பில், 'சாட்சியங்கள், ஆவணங்களை பரிசீலித்து தான், சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சாட்சிகளை மீண்டும் விசாரிக்க போதுமான வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று கூறி, வழக்கை ரத்து செய்ய கோர முடியாது' என, வாதிடப்பட்டது.
நிரூபிக்கவில்லை
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, 'வழக்கில் லஞ்ச பரிவர்த்தனை குறித்து, மனுதாரர் அறிந்திருந்தார் என்பதை, அரசு தரப்பு போதிய சாட்சிகள் வாயிலாக நிரூபிக்க தவறிவிட்டது.
'குற்றச்சாட்டை மாற்றிய பின், சாட்சிகளை மறு விசாரணை செய்ய மனுதாரருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது' என, உத்தரவிட்டார்.