கடந்த முறை தி.மு.க.,வுக்கு ஓட்டு போட்டது தவறு என்பதை ஜமாத்துக்கள் உணர்ந்துள்ளன முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் ஷேக் தாவூத் 'பளிச்'
கடந்த முறை தி.மு.க.,வுக்கு ஓட்டு போட்டது தவறு என்பதை ஜமாத்துக்கள் உணர்ந்துள்ளன முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் ஷேக் தாவூத் 'பளிச்'
ADDED : பிப் 25, 2025 06:52 PM
கோவை:''கடந்த முறை தி.மு.க.,வுக்கு ஓட்டளித்ததது தவறு என்பதை, ஜமாத்துக்கள் உணர்ந்துள்ளன, என, தமிழ் மாநில முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் ஷேக் தாவூத் தெரிவித்தார்.
கோவையில் அவர் அளித்த பேட்டி:
ஜமாத்துக்களை ஒருங்கிணைத்து, ஆட்சி மாற்றம் கொண்டு வரும் முயற்சியை தொடங்கியுள்ளேன். கோவையில் உள்ள ஜமாத்துக்களை சந்தித்து பேசினேன். தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்து, ஜமாத்துக்களை சந்தித்து பேசி ஒன்று திரட்ட உள்ளேன்.
கடந்த முறை தி.மு.க.,வுக்கு ஓட்டளித்ததது தவறு என்பதை, ஜமாத்துக்கள் உணர்ந்துள்ளன. தி.மு.க., ஆட்சி பற்றியும் விவாதித்து புரிய வைத்துள்ளேன். சுன்னத் உல் ஜமாத் சார்பில், தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி ஓட்டுகள் உள்ளன. இவற்றை ஒன்று திரட்டினால், ஆட்சியை மாற்ற முடியும். 2026ல் ஆட்சியை மாற்றினால் தான் ஜனநாயகம் தழைக்கும்.
தமிழகத்தில் எந்த பணிகளும் நடக்கவில்லை.
பழமைவாதிகளும், இஸ்லாமுக்கு எதிரானவர்களும் தான், தி.மு.க., கூட்டணியில் உள்ளனர். தி.மு.க., சின்னத்தில் நின்று, தி.மு.க.,வின் எம்.பி., எம்.எல்.ஏ.,க்களாகவே செயல்படுகின்றனர் இவர்கள்.
தி.மு.க.,கூட்டணி நிலைக்காது. அடுத்த தேர்தலில் வெற்றி பெறாது. அ.தி.மு.க.,வில் முன்பு உட்கட்சி பிரச்னைகள் இருந்தன. தற்போது, கட்சிக்கு சரியான தலைமை உள்ளது. அதனால், அக்கட்சி அதிக ஓட்டுக்களைப் பெற்று, ஆட்சிக்கு வரும்.
இவ்வாறு ஷேக் தாவூத் தெரிவித்தார்.

