ADDED : மே 03, 2024 01:35 AM
சென்னை:போதைப்பொருளை பல இடங்களில் பதுக்கி விற்ற வழக்கில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரின் உறவினரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையில், 'வாட்ஸாப்' குழு அமைத்து போதைப்பொருள் கடத்தப்படுவதாக, சென்னை வடக்கு மண்டல தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, வண்ணாரப்பேட்டையை சேர்ந்த காதர் மொய்தீன் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 8 கிராம் அளவு,' மெத்தாம்பெட்டமைன்' மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவரிடம் நடத்திய விசாரணையில் திருவல்லிக்கேணியை சேர்ந்த சுல்தான், அலாவுதீன் ஆகியோர் வாயிலாக, 'வாட்ஸாப்' குழுவில் இணைக்கப்பட்டதாகவும், அவர்கள் வாயிலாக, 'மெத்தாம்பெட்டமைன்' கிடைத்ததாகவும் தெரிவித்துஉள்ளார்.
இதையடுத்து, சுல்தானும், அலாவுதீனும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், திருவான்மியூர் பாலு நகரில் வசிக்கும் ராகுலிடமிருந்து, போதைப்பொருளை வாங்கியதாக கூறியுள்ளனர். இதையடுத்து, ராகுல் வீட்டில் தனிப்படை போலீசார் நேற்று சோதனை நடத்தினர்.
தனிப்படை போலீசார் கூறியதாவது:
போதைப்பொருட்களில் அதிக விலையுள்ளது, மெத்தாம்பெட்டமைன். இதை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து, அதை சென்னையின் பல இடங்களில் பதுக்கி வைத்து, விற்றுள்ளனர்.
சென்னை வண்ணாரப்பேட்டையிலும், திருவல்லிக்கேணியிலும், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தனிப்படை போலீசாரிடம் பிடிபட்ட கும்பலுக்கு, ராகுல் தான் போதைப்பொருள் சப்ளை செய்துள்ளார் என்பது தெரிய வந்திருக்கிறது. இவர், முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரின் மருமகன் நவீனின் அண்ணன் மகன்.
அவருக்கு எங்கிருந்து மெத்தாம்பெட்டமைன் வந்தது, அதை யாருக்கெல்லாம் சப்ளை செய்தார் என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
கிடைத்த தகவல் அடிப்படையில், நடத்தப்பட்ட அதிரடி சோதனைக்கு பின், ராகுல் போதைப்பொருள் கடத்தி விற்பனை செய்வது ஊர்ஜிதம் ஆகி இருக்கிறது.
இவ்வாறு கூறினர்.