ADDED : ஜூன் 10, 2024 12:47 AM

திருச்சுழி : விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே ஜீப் தறி கேட்டு ஓடியதில் நின்று கொண்டிருந்த மூவர் பலியாயினர்.
திருச்சுழி அருகே மண்டபசாலை பஸ் ஸ்டாப் அருகே உள்ள டீக்கடையில் மக்கள் நேற்று மாலை 5:30 மணிக்கு டீ குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது மதுரை- வாலிநோக்கம் நெடுஞ்சாலையில் சாயல்குடியில் இருந்து மதுரைக்கு ஜீப் சென்றது.
திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி நின்ற மக்கள் மீது மோதியதில் செங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டு வியாபாரி காளிமுத்து 54, விவசாயி விஜயராமன் 53, துாக்கி வீசப்பட்டு உயிரிழந்தனர்.
மூக்கையா 50, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். தாறுமாறாக ஓடிய ஜீப் மின்கம்பத்தில் மோதியதில் மின்கம்பம் முறிந்தது. தகவல் அறிந்த உயிரிழந்தவர்களின் குடும்பத்தார் ரோடு மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதன் பேரில் கலைந்து சென்றனர். எம்.ரெட்டியபட்டி போலீசார் விசாரிக்கின்றனர். தப்பி ஓடிய டிரைவரை தேடுகின்றனர்.

