மாவட்ட நீதிபதிகளுக்காக '100 நாளில் தீர்ப்பு' நுால்
மாவட்ட நீதிபதிகளுக்காக '100 நாளில் தீர்ப்பு' நுால்
ADDED : மே 17, 2024 01:31 AM
சென்னை: மாவட்டங்களில் பணிபுரியும் நீதிபதிகளுக்கு வழங்குவதற்காக, தான் எழுதிய, '100 நாளில் தீர்ப்பு' என்ற நுாலை, சென்னை உயர் நீதிமன்ற நுாலகத்துக்கு, முன்னாள் மாவட்ட நீதிபதி வழங்கினார்.
நாமக்கல் மாவட்டம், பொய்யேரி கிராமத்தை சேர்ந்தவர் கே.ராமசாமி; சென்னையில் வசிக்கும் இவர், 35 ஆண்டுகள், நீதித்துறையில் பதவி வகித்தவர். மாவட்ட நீதிபதியாக பதவி வகித்து ஓய்வு பெற்றார்.
சென்னையில் மாவட்ட நுகர்வோர் மன்ற தலைவராக, 5 ஆண்டுகள் இருந்தார். உயர் நீதிமன்ற சட்டப் பணிகள் ஆணைக்குழுவில் இடம் பெற்றுள்ளார். '100 நாளில் தீர்ப்பு, ஹலோ கன்ஸ்யூமர்' என்ற தலைப்பில் நுால்கள் எழுதியுள்ளார்.
தான் எழுதியுள்ள, '100 நாளில் தீர்ப்பு' என்ற நுாலை, மாவட்டங்களில் பணிபுரியும் நீதிபதிகளுக்கு இலவசமாக வழங்குவதற்காக, உயர் நீதிமன்றத்தின் அனுமதி கோரினார்.
இதற்கு அனுமதி கிடைத்ததை தொடர்ந்து, 500 நுால்களை உயர் நீதிமன்ற நுாலகத்திற்கு வழங்கினார்.
இதுகுறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி கே.ராமசாமி கூறும்போது, ''மாவட்டங்களில் பணிபுரியும் நீதிபதிகளுக்கு கிடைக்கும் வகையில், நுாலக அதிகாரிகள் அனுப்பி வைப்பர். தினசரி விசாரணை, வாய்தா நடைமுறைக்கு முடிவு கட்டினாலே, 100 நாளில் தீர்ப்பு சாத்தியமே,'' என்றார்.

