சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜியை தேடி ஜோதிமணி
சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜியை தேடி ஜோதிமணி
ADDED : மார் 23, 2024 07:14 AM

கரூர் லோக்சபா தொகுதியில், ஜோதிமணி மீண்டும் போட்டியிட்டால் மன்னிப்பு கேட்க வேண்டும் என, தி.மு.க. நிர்வாகிகள் பேசினர்.
கரூரில் உள்ள, தி.மு.க., மாவட்ட அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. லோக்சபா தேர்தல் பொறுப்பாளர், எம்.பி., அப்துல்லா தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், காங்கிரஸ் சார்பில் ஜோதிமணி போட்டியிடுவது பற்றி, ஆவேசமாக நிர்வாகிகள் பேசியுள்ளனர்.
தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது: கடந்த லோக்சபா தேர்தலில் காங்., சார்பில் ஜோதிமணி போட்டியிட்டார். அப்போது. அ.தி.மு.க.,வில் வலுவான வேட்பாளர் தம்பிதுரையை எதிர்த்து களம் கண்டோம்.
பல்வேறு வழக்குகளை சந்தித்து, ஜோதிமணியை வெற்றி பெற வைத்தோம். அதன்பின் ஜோதிமணி யாரையும் மதிக்கவில்லை. வெற்றி பெற்ற பின், நன்றியும் தெரிவிக்கவில்லை.
அப்போதைய அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில், கட்சி அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தல் வார்டு பங்கீடு பேச்சு நடந்தது. ஜோதிமணி பேச்சு நடத்த அமர்ந்து, பின், நாற்காலியை தள்ளிவிட்டு சென்றார். மீண்டும் கரூரில் ஜோதிமணி போட்டியிட்டால், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி கேட்காவிட்டால் அவருக்கு தேர்தல் பணியாற்ற மாட்டோம். இவ்வாறு பேசினர்.
தி.மு.க.,வினரின் இந்த முடிவை அடுத்து கடும் குழப்பத்தில் இருக்கும் ஜோதிமணி சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜியை வழக்கறிஞர் வாயிலாக அணுகலாமா என யோசித்து வருவதாக தெரிகிறது.

