கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் 2 நாட்களுக்குள் விசாரணை அறிக்கை தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குனர் தகவல்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் 2 நாட்களுக்குள் விசாரணை அறிக்கை தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குனர் தகவல்
ADDED : ஜூன் 23, 2024 04:55 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் இறந்த சம்பவத்தில், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குநர் விசாரணை நடத்தினார்.
தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குனர் ரவிவர்மன் நேற்று காலை, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து, கள்ளச்சாராய சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
கருணாபுரம் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களை சந்திக்கவும், சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு என்னென்ன உதவிகள் தேவை என்பது குறித்து கேட்டறிந்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்திருக்க வேண்டும். குறிப்பாக குடும்ப தலைவர்களுக்கு சரியான ஆலோசனைகளையும், கட்டுப்பாடுகளையும் விதித்து சாராயம் குடிக்க பெண்கள் அனுமதிக்கக் கூடாது. இச்சம்பவத்தால் உயிரிழந்த நபர்களுக்கு தமிழக அரசு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது.
மேலும், சிறந்த மருத்துவர்கள் மூலம் உயர்தர சிகிச்சை வழங்குவதால், உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் குணமடைந்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்த விசாரணை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டுள்ளது. ஆதி திராவிட வகுப்பினர் பாதிக்கப்படும் பகுதிக்குச் சென்று, அவர்களுக்கு தேவையான உதவிகள், தொடர் உயிரிழப்பு ஏற்படாமல் பாதுகாத்தல் மற்றும் மறுவாழ்வு கிடைப்பதை உறுதி செய்வது தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் கடமை.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் பட்டியலினத்தவர்களாக இருப்பதால், ஆணையம் வரையறுத்துள்ள சட்ட விதிகளின்படி அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இன்னும் இரண்டு நாட்களுக்குள் விசாரணை அறிக்கை ஆணையத்தின் தலைவர் மற்றும் மத்திய அரசுக்கு அளிக்கப்படும் என்றார்.
தொடர்ந்து, கருணாபுரம் பகுதிக்கு சென்று அங்கு உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டார். டி.ஆர்.ஓ., சத்தியாராயணன், மருத்துவகல்லுாரி முதல்வர் (பொறுப்பு) நேரு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பின்னர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாபுரம் சதீஷ்குமார்,40; சுப்ரமணி,60; கண்டாச்சிபுரம் அடுத்த சித்தேரிப்பட்டு பிரவீன்,21; ஜெகதீஸ்வரன்,24; ஆகியோரை சந்தித்து விசாரணை நடத்தினார். அப்போது, ஆர்.டி.ஓ., ஷாகுல் அமீது, கல்லுாரி டீன் ரமாதேவி, ஆர்.எம்.ஓ., ரவிக்குமார் உடனிருந்தனர்.

