கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி விசாரணை 18க்கு தள்ளிவைப்பு
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி விசாரணை 18க்கு தள்ளிவைப்பு
ADDED : ஜூலை 12, 2024 02:51 AM
சென்னை:கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை கோரிய மனுக்களின் விசாரணையை வரும் 18ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில், கள்ளச்சாராயம் குடித்து 66 பேர் பலியாகினர். சம்பவம் தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வழக்கை, சி.பி.ஐ.,க்கு மாற்றக்கோரி, உயர் நீதிமன்றத்தில், அ.தி.மு.க., வழக்கறிஞர்கள் பிரிவு செயலர் இன்பதுரை, பா.ம.க., செய்தி தொடர்பாளரான வழக்கறிஞர் கே.பாலு, தே.மு.தி.க., முன்னாள் எம்.எல்.ஏ., பார்த்தசாரதி, வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., ஸ்ரீதரன், பா.ஜ., வழக்கறிஞர் மோகன்தாஸ் மனு தாக்கல் செய்தனர்.
இவ்வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது ஷபிக் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில், வழக்கறிஞர்கள் டி.செல்வம், ஜி.எஸ்.மணி, யானை ராஜேந்திரன் உள்ளிட்டோர் ஆஜராகினர்.
அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ''அ.தி.மு.க., - பா.ம.க., வழக்கில், அரசு தரப்பில் ஏற்கனவே அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டது. புதிய மனுக்களுக்கு பதில் அளிக்க வேண்டியதுள்ளது,'' என்றார்.
இதையடுத்து, அனைத்து மனுக்களுக்கும் அரசு தரப்பில் பதில் மனுவும், அறிக்கையும் தாக்கல் செய்யவும், அதை மனுதாரர்களுக்கு வழங்கவும் உத்தரவிட்டு, விசாரணையை, வரும் 18க்கு முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.

