கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலிக்கு மெத்தனாலே காரணம்: சி.பி.சி.ஐ.டி., விசாரணையில் 'திடுக்'
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலிக்கு மெத்தனாலே காரணம்: சி.பி.சி.ஐ.டி., விசாரணையில் 'திடுக்'
ADDED : ஜூலை 03, 2024 06:50 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் விற்பனை செய்தது தண்ணீர் கலந்த மெத்தனால் என்பது சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்ட 229 பேர், சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில், 150 பேர் குணமடைந்தனர். 65 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்;. 14 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.
இதுதொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்கு பதிந்து சாராய வியாபாரி, மெத்தனால் சப்ளையர்கள் என, 21 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கண்ணுகுட்டி கோவிந்தராஜ், 50, அவரது மனைவி விஜயா, 44, சின்னதுரை, 36, ஜோசப், 40, உட்பட 11 பேரை காவலில் எடுத்து விசாரிக்கின்றனர்.
விசாரணையில், சென்னையை சேர்ந்த கவுதம்சந்த், பன்ஷிலால் ஆகியோர் உரிமம் பெற்று வெளிமாநிலத்தில் இருந்து மெத்தனாலை இறக்குமதி செய்து விற்பனை செய்யும் இவர்கள், எவ்வித உரிமமும் இல்லாத சென்னை சிவக்குமார் மற்றும் மடுகரை மாதேஷ் ஆகியோருக்கு விற்பனை செய்ததும், அதை கருணாபுரம், மாதவச்சேரி, சேஷசமுத்திரம் பகுதி சாராய வியாபாரிகள் வாங்கி, தண்ணீர் கலந்து விற்றதும் தெரிய வந்துள்ளது.
அதை தொடர்ந்து, 11 பேரில் ஐந்து பேரை நேற்று மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மற்ற ஆறு பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். அவர்களை இன்று மாலை 3:00 மணிக்கு கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.