கருணாநிதி நுாற்றாண்டு நினைவு நாணயம் ஒரே நாளில் ரூ.50 லட்சத்திற்கு விற்பனை
கருணாநிதி நுாற்றாண்டு நினைவு நாணயம் ஒரே நாளில் ரூ.50 லட்சத்திற்கு விற்பனை
ADDED : ஆக 20, 2024 08:20 PM
கருணாநிதி உருவம் பொறித்த, 100 ரூபாய் நாணயத்தை, அமைச்சர்கள், மாவட்டச்செயலர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று, 10,000 ரூபாய் விலை கொடுத்து ஆர்வமுடன் வாங்கி சென்றனர். நேற்று ஒரே நாளில், 500 நாணயங்கள் விற்கப்பட்டு, 50 லட்சம் ரூபாய் வசூலாகியுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நுாற்றாண்டு நினைவை ஒட்டி, அவரது உருவம் பொறித்த நாணயத்தை, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், இம்மாதம், 18ம்தேதி சென்னையில் வெளியிட்டார்.
கருணாநிதி உருவ நாணயம், தி.மு.க., தலைமை அலுவலகமான சென்னை அறிவாலயத்தில், தலா, 10,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்டச்செயலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் நேற்று ஆர்வமுடன் நாணயங்களை வாங்கிச் சென்றனர். நேற்று மட்டும், 500 நாணயங்கள், 50 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளன.
அதேசமயம், தி.மு.க.,வில் எந்த பலனும் எதிர்பாராமல் உழைத்து வருவதோடு, கருணாநிதி மீது அன்பும் பாசமும் தொண்டர்கள், 100 ரூபாய் கொடுத்து நாணயம் வாங்க, வழி வகை செய்ய வேண்டும் என, கட்சி தலைமைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தி.மு.க., கூட்டணி கட்சிகளின் தலைவர்களான செல்வப்பெருந்தகை, வைகோ, காதர்மொகிதீன், ஈஸ்வரன் போன்றவர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் சார்பில்,அமைப்புச்செயலர் ஆர்.எஸ்.பாரதி நாணயத்தை வழங்கினார்; இதற்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை.
திருமாவளவன், பாலகிருஷ்ணன், முத்தரசன் போன்றவர்கள் வெளியூரில் இருந்ததால், அவர்களுக்கு அடுத்தடுத்து நாட்களில் நாணயம் வழங்கப்பட உள்ளது.
- நமது நிருபர் -

