ADDED : மே 30, 2024 10:42 PM
சென்னை:கருணாநிதி நுாற்றாண்டு நிறைவு விழாவை சிறப்பிக்கும் வகையில், தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள, வரலாற்று சிறப்பு புகைப்பட கண்காட்சியை, தி.மு.க., பொருளாளர் டி.ஆர்.பாலு நேற்று திறந்து வைத்தார்.
புகைப்பட கண்காட்சியில், 1934 முதல் 2024ம் ஆண்டு வரை, அதாவது, கருணாநிதி தன் மாணவப் பருவம் முதல் அரசியல் வாழ்வில் இறுதி வரை பயணித்த, பல்வேறு நிகழ்வுகள் குறித்த புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. ஈ.வெ.ரா., காமராஜர், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., உள்ளிட்ட பல்வேறு தலைவர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் என, ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன.
இக்கண்காட்சியை டி.ஆர்.பாலு நேற்று திறந்து வைத்தார். அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பராதி, தலைமை நிலைய செயலர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா உட்பட பலர் பங்கேற்றனர். கருணாநிதி உருவப்படத்திற்கு கட்சி நிர்வாகிகள் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.
கண்காட்சியை, வரும் 3ம் தேதி வரை காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை பொது மக்கள் இலவசமாக பார்வையிடலாம் என தி.மு.க., தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.