நோபல் பரிசு தராவிட்டால் அமெரிக்காவுக்கு ரொம்ப அவமானம் ஆகிவிடும்: புலம்பும் டிரம்ப்
நோபல் பரிசு தராவிட்டால் அமெரிக்காவுக்கு ரொம்ப அவமானம் ஆகிவிடும்: புலம்பும் டிரம்ப்
ADDED : அக் 01, 2025 11:18 AM

நியுயார்க்: நோபல் பரிசு தராவிட்டால் அது அமெரிக்காவுக்கு அவமானம் ஆகிவிடும் என்று அந்நாட்டு அதிபர் டிரம்ப் புலம்பி தள்ளி வருகிறார்.
உலக நாடுகள் இடையே மூண்ட 7 போர்களை நிறுத்திவிட்டேன், 11 போர்களை நிறுத்தி விட்டேன் என்று தொடர்ந்து தம்பட்டம் அடித்து வருகிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப். ரஷ்யா, உக்ரைன் போரையும் எப்படியும் நிறுத்திவிடுவேன் என்றும் விடாது கூறி வரும் அவர், உலக நாடுகள் இடையே அமைதியை நிலைநாட்டியதற்கு தனக்கு நோபல் பரிசு தர வேண்டும் என்று விடாப்பிடியாக கேட்டுக் கொண்டே இருக்கிறார்.
அவரின் குரல் நோபல் பரிசு தேர்வு கமிட்டிக்கு கேட்டதோ, இல்லையோ பாகிஸ்தானுக்கு கேட்க, அந்நாடும் டிரம்புக்கு ஆதரவுக்குரல் எழுப்பியது. ஆனாலும் நோபல் பரிசு உண்டா இல்லையா என்பது பற்றிய எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.
இந் நிலையில் நோபல் பரிசு தரவில்லை என்றால் அது அமெரிக்காவுக்கு அவமானம் ஆகி விடும் என்று டிரம்ப் மீண்டும் கூறி இருக்கிறார். இஸ்ரேல்-காசா போரை நிறுத்திவிட்டேன், எனவே நோபல் பரிசு தரவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் மேலும் கூறி உள்ளதாவது; நாங்கள் அதை சரி செய்துவிட்டோம். (காசா-இஸ்ரேல் போரை குறிப்பிடுகிறார்) ஹமாஸ் அதை ஒப்புக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். அப்படி ஏற்காவிட்டால் அவர்களுக்கு மிகவும் கடினமானதாக இருக்கும்.
அனைத்து அரபு நாடுகளும், இஸ்லாமிய நாடுகளும் ஒப்புக் கொண்டு இருக்கின்றன. இஸ்ரேல் ஒப்புக்கொண்டுவிட்டடது. அது ஒரு அற்புதமான விஷயம். இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.