தடுப்பு கன்டெய்னர்களை ஆற்றில் தள்ளிய போராட்டக்காரர்கள்
தடுப்பு கன்டெய்னர்களை ஆற்றில் தள்ளிய போராட்டக்காரர்கள்
ADDED : அக் 01, 2025 07:53 AM

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அரசுக்கு எதிராக, பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடக்கும் போராட்டம் இரண்டாவது நாளாக நேற்று தீவிரமடைந்தது.
நம் அண்டை நாடான பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியில், அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது.
அவாமி அதிரடி குழு என்ற குடிமக்கள் சமுதாய கூட்டணி போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. மருத்துவம், கல்வி, உட்கட்டமைப்பு ஆகிய வளர்ச்சிப் பணிகள் உள்ளிட்டவற்றில் தாங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உணவுப் பொருள் மற்றும் மின்சாரத்துக்கு மானியம் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ஆக்கிரமிப்பு காஷ்மீரில், அவாமி அதிரடி குழு தலைமையிலான பொதுமக்கள் போராட்டங்களின் போது வன்முறை வெடித்துள்ளது. சந்தைகள், கடைகள் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளன. போக்குவரத்து சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது பாக்., ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில், இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 22 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில், இரண்டாவது நாளாக நேற்றும் தீவிர போராட்டம் நடந்தது. போராட்டக்காரர்கள் முன்னேறாமல் இருக்க பாதுகாப்புப் படையினர் கன்டெய்னர்களை சாலை நடுவில் நிறுத்தியிருந்தனர்.
அப்போது போராட்டக்காரர்கள் பாக்., படையினர் மீது கற்களை வீசினர். மேலும் பாலம் ஒன்றின் மீது நிறுத்தப்பட்டிருந்த கன்டெய்னர்களை ஆற்றில் தள்ளினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.