கருணாநிதி நாணயம் இன்று வெளியீடு ராஜ்நாத்சிங் வருகை
கருணாநிதி நாணயம் இன்று வெளியீடு ராஜ்நாத்சிங் வருகை
ADDED : ஆக 17, 2024 07:14 PM
சென்னை:சென்னையில் கடலோர காவல் படையின் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மைய புதிய கட்டடம் திறப்பு விழா, முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா ஆகியவற்றில் பங்கேற்க, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், இன்று சென்னை வருகிறார்.
இன்று மாலை 5:00 மணிக்கு நடக்கும் விழாவில், அதிநவீன இந்திய கடலோர காவல் படை கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மைய கட்டடம், மண்டல கடல் மாசகற்று மையம், புதுச்சேரி கடலோர காவல் படை விமான தள வளாகம் ஆகியவற்றை திறந்து வைக்கிறார்.
இவ்விழா முடிந்ததும், மாலை 6:00 மணிக்கு காரில், மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடம் செல்கிறார். அங்கு மரியாதை செலுத்திவிட்டு, கலைவாணர் அரங்கில் நடக்கும் விழாவில் பங்கேற்க உள்ளார். கருணாநிதி நுாற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயத்தை வெளியிடுகிறார்.
முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். விழா முடிந்து இரவு 8:10 மணிக்கு, ராஜ்நாத்சிங் டில்லி செல்கிறார்.

