ADDED : ஜூலை 24, 2024 09:53 PM
கரூர்:கரூரில் தொடரப்பட்ட பண மோசடி வழக்கில், சவுக்கு சங்கருக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரூர் அருகே, காந்தி கிராமம் இந்திரா நகரை சேர்ந்த கிருஷ்ணன், 45, பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவரிடம், சென்னையை சேர்ந்த 'சவுக்கு சங்கர் மீடியா' முன்னாள் ஊழியர் விக்னேஷ், 35, ஆன்லைனில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என கூறியுள்ளார். இதை நம்பிய கிருஷ்ணன்,  2023 அக்.,ல், 7 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளார். கூறியபடி லாப பணம் திரும்ப தரவில்லை. இதுகுறித்து கேட்டதற்கு, விக்னேஷ் கொலை மிரட்டல் விடுத்ததாக, கரூர் டவுன் போலீசில் கிருஷ்ணன் புகாரளித்தார்.
விக்னேசை கைது செய்து நடத்திய விசாரணையில், கிருஷ்ண-னிடம் வாங்கிய, 7 லட்ச ரூபாயை, சவுக்கு சங்கரிடம் கொடுத்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து சவுக்கு சங்கர் மீது, கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து, கடந்த, 9ல் நான்கு நாள் காவலில் வைத்து விசாரிக்க அழைத்து சென்றனர். விசா-ரணை முடிந்து கடந்த, 13ல் கரூர் டவுன் போலீசார், சவுக்கு சங்கரை கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின், அவர் மீண்டும்  சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், கரூர் நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு சவுக்கு சங்கர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி பரத்குமார் நேற்று விசாரித்து, சவுக்கு சங்கருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

