கேரள மன்னர் பழசிராஜா குகை பொதுமக்கள் பார்வையிட ஏற்பாடு
கேரள மன்னர் பழசிராஜா குகை பொதுமக்கள் பார்வையிட ஏற்பாடு
ADDED : மார் 02, 2025 02:43 AM

பந்தலுார்: பந்தலுார் அருகே சேரம்பாடியில் கண்டுபிடிக்கப்பட்ட கேரள மன்னர் பழசிராஜாவின் குகை, பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டது.
கேரளாவின் கண்ணுார் மாவட்டத்தில், கூத்து பரம்பு பகுதியில் அமைந்துள்ள கோட்டயம் மற்றும் மலபார் பகுதியின் மன்னராக, 1753ல் ஆட்சி புரிந்தவர் பழசிராஜா.
அப்போது, நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை, நெலாக்கோட்டை, ஸ்ரீ மதுரை, சேரம்பாடி மற்றும் மசினகுடி ஆகியவற்றுடன், கண்ணுார் மற்றும் வயநாடு மாவட்டத்தின் தலைச்சேரி உள்ளிட்ட பகுதிகள், கோட்டயம் மண்டலத்தின் கீழ் இருந்தன.
மக்கள் ஆதரவு
அப்போது, ஆங்கிலேய அரசின் வரி வசூலுக்கு எதிராக பழசிராஜா குரல் கொடுத்ததுடன், ஆங்கில பிரிவினைவாத ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடியதால், மக்கள் இவருக்கு பெரும் ஆதரவு அளித்தனர்.
பிரிட்டிஷ் படைகள் இவரின் கோட்டயம் அரண்மனையை சுற்றி வளைத்தபோது, அங்கிருந்து வயநாடு மலைப்பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தார்.
வயநாடு பகுதிகளை, 1799-ல் தன் ஆளுகையின் கீழ் கொண்டு வந்தார். தொடர்ந்து பழசிராஜா தன் வீரர்களுடன் வனப்பகுதியில் தங்கி, குறிச்சியா பழங்குடியின மக்களை ஒன்றிணைத்து, ஆங்கிலேயருக்கு எதிராக போரில் ஈடுபட்டார்.
அந்த நேரத்தில், இப்பகுதியில் வாழ்ந்த குரும்பா, பணியர் பழங்குடியின மக்கள், வீரர்களுக்கு தேவையான உணவு மற்றும் தங்கும் இடங்களை கொடுத்தனர்.
மேலும், ராஜாவுடன் இணைந்து தாங்கள் உருவாக்கிய வில், அம்பு போன்றவற்றையும் போரில் பயன்படுத்தி உள்ளனர்.
பந்தலுார் அருகே கோட்டமலை மற்றும் நெலாக்கோட்டை பகுதிகளில் குகைகள் அமைத்து, அதில் பழசிராஜா தன் படைகளுடன் தங்கியிருந்து, ஆங்கிலேயருக்கு எதிராக பல முறை கொரில்லா போர் தொடுத்துள்ளார்.
அதில், ஒரு குகை சேரம்பாடி பகுதியில் செயல்படும் தனியார் எஸ்டேட் தேயிலை தொழிற்சாலை அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
30 மீட்டர் துாரம்
குகையில், 30 மீட்டர் துாரம் சென்றதும், இரண்டு பாதைகள் பிரிந்து செல்கின்றன. தற்போது, குகையில் புதர்கள் அகற்றப்பட்டு, பார்வையாளர்கள் செல்லும் அளவிற்கு சீரமைக்கப்பட்டுள்ளது.
இந்த குகையை பழசிராஜாவின் ஆறாம் தலைமுறை பேத்தி, கொச்சு தம்புராட்டி சுபா வர்மா; அவரது கணவர் டாக்டர் கிஷோர் நேரில் பார்வையிட்டு, மக்கள் இலவசமாக பார்வையிட திறந்து வைத்தார்.
பழசிராஜா வாரிசு சுபா வர்மா கூறுகையில், ''எங்களின் மூதாதையரான பழசிராஜா, 31 ஆண்டுகள் ஆங்கிலேயருடன் போரிட்டுள்ளார்.
''அவர் தேசத்திற்காக வனங்களில் தங்கியிருந்து போராடிய இடத்தையும், தன் படை வீரர்களுடன் தங்கி இருந்த குகையையும் பார்க்க முடிந்ததை பெரும் பாக்கியமாக கருதுகிறோம்.
''இதுபோன்ற வரலாற்று சுவடுகளை பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டும். மேலும், மன்னருடன் போர் வீரர்களாக, மண்ணின் மைந்தர்களான பழங்குடியினர் இருந்தனர் என்பது பெருமையான விஷயம். அனைவரும் இவர்களை போற்ற வேண்டும்,'' என்றார்.