ADDED : ஆக 17, 2024 07:32 PM
சென்னை:'கோல்கட்டாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது மன்னிக்க முடியாத செயல்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
கோல்கட்டா மருத்துவக் கல்லுாரியில் பெண் பயிற்சி டாக்டர், சிலரால் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதும், அதைத் தொடர்ந்து நடந்த வன்முறைகளும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றன. மனிதத் தன்மையற்ற மிருகத்தனமான இந்த செயல்கள் மன்னிக்க முடியாதவை.
உயிர் காக்கும் டாக்டர்கள் கடவுளைப் போன்றவர்கள். அவர்களை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவர்கள் மனித குலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க முடியாது. குற்றவாளிகளை இதுவரை மேற்கு வங்க காவல் துறையும், சி.பி.ஐ.,யும் கண்டுபிடிக்காதது, டாக்டர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெண் டாக்டரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை கைது செய்து, துாக்குத் தண்டனை பெற்றுத் தர வேண்டும். டாக்டர்களை அச்சுறுத்தும் வகையில் வன்முறையில் ஈடுபட்ட கும்பலையும், அவர்களின் பின்னணியில் இருப்பவர்களையும் கைது செய்து தண்டிக்க வேண்டும்.
நாடு முழுதும் அரசு டாக்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். வாய்ப்பிருந்தால் அனைத்து அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளிலும் தனி காவல் நிலையம் அமைக்க வேண்டும்.
பட்ட மேற்படிப்பு மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, அவர்களுக்கான பணி நேரத்தை இயன்ற அளவுக்கு குறைக்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

