வேலம்மாள் பள்ளியில் நீட், ஐ.ஐ.டி., சாதனை மாணவர்களுக்கு பாராட்டு: ரூ.14 கோடி கல்வி உதவித்தொகை வழங்கல்
வேலம்மாள் பள்ளியில் நீட், ஐ.ஐ.டி., சாதனை மாணவர்களுக்கு பாராட்டு: ரூ.14 கோடி கல்வி உதவித்தொகை வழங்கல்
ADDED : ஜூலை 20, 2024 01:18 AM

சென்னை : சென்னை பொன்னேரி வேலம்மாள் சர்வதேச பள்ளி வளாகத்தில் நீட், ஐ.ஐ.டி.,யில் தேர்வுகளில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா நடந்தது. இதில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள் உள்ளிட்டோருக்கு ரூ.14 கோடி மதிப்பிலான கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.
நீட் நுழைவு தேர்வில் 720க்கு 720 மதிப்பெண் பெற்ற ஸ்ரீராம் மற்றும் நகுல், ஜோநாதன் ஐ.ஐ.டி.,க்கு பி. பிளானிங் மற்றும் பி.ஆர்க்., தேசிய அளவில் முதலிடம் பெற்றனர். ஐ.ஐ.டி.,க்கு தேர்வு பெற்ற 40க்கும் மேற்பட்ட மாணவர்கள், நீட் தேர்வில் 600க்கு மேற்பட்ட மதிப்பெண் பெற்ற 269 மாணவர்கள் ஆகியோர் பாராட்டி கவுரவிக்கப்பட்டனர். சிறப்பிடம் பெற்ற மாணவர்கள் உட்பட 2000 பேருக்கு இக்கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.
வேலம்மாள் கல்விக் குழும நிறுவனர் எம்.வி., முத்துராமலிங்கம் மாணவர்களை பாராட்டி பேசுகையில் கல்வி ஒன்றே நம்மை உயர்த்திடும் உற்றதுணை. கல்வியில் சிறந்து விளங்கிடும் மாணவர்களின் எதிர்காலக்கனவுக்கு உற்ற துணையாக 'முத்துராமலிங்கம் கல்வி உதவித் தொகை' என்ற பெயரில் உதவித் தொகை வழங்கப்படுகிறது. மாணவர்கள் தங்கள் திறமையை மேலும் வளர்த்துக்கொள்ள உதவியாக இருக்கும் என்றார்.
இயக்குநர் எம்.வி.எம்.சசிக்குமார் மாணவர்களின் சாதனைகளை பாராட்டி தேசிய அளவில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கினார். கல்வியியல் இயக்குநர் கீதாஞ்சலி சசிக்குமார், வேலம்மாள் மருத்துவமனை இயக்குநர் சந்தோஷ்குமார், வேலம்மாள் அறிவுப்பூங்கா முதன்மை முதல்வர் மாதவகிருஷ்ணன், டாக்டர் அசோக்குமார் உள்ளிட்டோர் பேசினர். மருத்துவமனைகள் ஆலோசகர் சீனிவாச வர்மா முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் சாந்தி வரவேற்றார். கல்விக் குழும செயல் அலுவலர் பிரபாகரன் நன்றி கூறினார்.

