ADDED : ஆக 30, 2024 11:07 PM
மயிலாடுதுறை, ஆக. 31--
''தமிழகத்தில் கடந்த மூன்றாண்டுகளில், 2,005 கோவில்களில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது,'' என, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
மயிலாடுதுறை மாவட்டம், பரசலுார் கிராமத்தில் நேற்று நடந்த, வீரட்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற அவர் கூறியதாவது:
தமிழகத்தில் புதிய ஆட்சி பொறுப்பேற்ற பின், பல ஆண்டுகளாக அனுமதி கிடைக்காமல் இருந்த, தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட 118 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடந்துள்ளது. மாநிலம் முழுவதும் இன்றுடன், 2,005 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது.
முத்தமிழ் முருகன் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அனைவரும் ஆதரிப்பர் என்று எப்படி சொல்ல முடியும்? ஜனநாயக நாட்டில் அவர்களின் கருத்தை கூறியுள்ளனர். விமர்சனங்களை உள்வாங்கிக் கொள்கிறோம்; அதற்கு எதிர்வினையாற்ற தயாராக இல்லை.
இதுவரை 6,750 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டு உள்ளன. 1.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் அளவிடப்பட்டு அறநிலையத்துறையால் கல் பதித்து பாதுகாக்கப்பட்டுள்ளது.
இறைவன் சொத்து இறைவனுக்கே என்ற தாரக மந்திரத்தோடு, தொடர்ந்து ஆக்கிரமிப்பு சொத்துக்களை மீட்கும் பணியை இந்த ஆட்சி மேற்கொள்ளும். கோவில் நகைகளை உருக்கி, டிபாசிட் செய்வதற்கு எதிர்ப்புகள் வந்தாலும், அது பயன் தரும் திட்டமாகவே உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.