ADDED : மே 30, 2024 01:33 AM
சென்னை:'சேவாபாரதி தமிழ்நாடு' அமைப்பின் மாநில பொதுச்செயலர் நிர்மல் குமார் வெளியிட்ட அறிக்கை:
'பஞ்சகார்யா' திட்டத்தின் கீழ், கல்வி, மருத்துவம், சமுதாய நலன், சுயசார்பு, பேரிடர் மேலாண்மை ஆகிய ஐந்து துறைகளில், சேவாபாரதி பணிகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நாட்டின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனங்களில் ஒன்றான, 'எல் அண்டு டி' உடன் இணைந்து, ஒன்றரை முதல் மூன்று மாதங்கள் வரையிலான தொழிற்பயிற்சியை அளிக்க உள்ளது.
தச்சு மற்றும் சாரம் அமைக்கும் வேலை, நவீன கட்டு மற்றும் பூச்சி வேலை, கம்பி வளைத்தல் மற்றும் பொருத்தும் வேலை, கட்டுமான எலக்ட்ரீசியன், வெல்டர், பிட்டர், பிளம்பர், குடிநீர், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய பணி போன்றவற்றுக்கு, இலவச பயிற்சி அளிக்க, எல் அண்டு டி நிறுவனத்துடன், சேவாபாரதி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்தப் பயிற்சி, காஞ்சிபுரம் மற்றும் ஓசூர் அருகே உள்ள அத்திப்பள்ளியில் நடக்கும். இதற்கு, எட்டாம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ., வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். உணவு, தங்குமிடம், சீருடை, பாதுகாப்பு உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும்.
ஒரே நேரத்தில், 2,000 பேருக்கு பயிற்சி அளிக்கும் இடவசதி, உலகத்தரம் வாய்ந்த பயிற்சி, தேவைக்கேற்ப கம்ப்யூட்டர் பயிற்சி ஆகியவை, இப்பயிற்சியின் சிறப்பு அம்சங்கள்.
பயிற்சி முடித்தவர்களுக்கு, 'எல் அண்டு டி' நிறுவன சான்றிதழ் மற்றும் அரசு தேர்வாளர்கள் வாயிலாக தேர்வு நடத்தி, அரசு ஐ.டி.ஐ., சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு, 'எல் அண்டு டி' கட்டுமான பணிகள் நடக்கும் இடங்களில் வேலை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.