குன்னுார் ராணுவ பகுதியில் மண் சரிந்து தொழிலாளி பலி
குன்னுார் ராணுவ பகுதியில் மண் சரிந்து தொழிலாளி பலி
ADDED : மே 06, 2024 11:40 PM

குன்னுார்: நீலகிரி மாவட்டம், குன்னுார் அருகே வெலிங்டன் கூர்கா கேம்ப் ராணுவ பகுதியில், 'மிலிட்டரி இன்ஜினியரிங் சர்வீஸ்' சார்பில், பழைய வீடுகளை அகற்றி புதிய கட்டுமான பணிகள் நடக்கின்றன. நேற்று காலை, ஐந்து தொழிலாளர்கள் பணியை துவங்கினர். அதில், தேனி மாவட்டம் போடிநாயக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த சக்தி, 31, திடீரென ஏற்பட்ட மண்சரிவில் சிக்கினார்.
உடனடியாக அருகில் இருந்த தொழிலாளர்கள், பொக்லைன் உதவியுடன் மண்ணை அகற்றி, அவரை மீட்டு, அருகில் இருந்த ராணுவ மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி இறந்தார்.
தொடர்ந்து, கோவை 'முத்து கன்ஸ்ட்ரக்ஷன்' உரிமையாளர் ஆனந்த், பொறியாளர் பாலாஜி, ஆகியோர் மீது வெலிங்டன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், பார்த்தசாரதி கைது செய்யப்படார். போலீசார் கூறுகையில், 'அந்த பகுதியில், பழைய வீடுகளை இடித்து புதிய கட்டுமான பணிகளுக்கு, 15 உயரத்திற்கு அடித்தளம் அமைத்து கம்பிகளுக்கு இடையே பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
தொழிலாளி சக்தி, பலகைகளை அகற்றி, மாற்று இடங்களில் வைத்து வந்தார். அப்போது, திடீரென மண் சரிந்து அவரை மூடியது. அவரின் உடலில் கம்பிகள் குத்தி காயங்கள் ஏற்பட்டு இறந்தார்' என்றனர்.