'பேஸ்புக்' வாயிலாக பல லட்சம் சுருட்டல்: வேலையில்லாத வாலிபர்கள் புது 'டெக்னிக்'
'பேஸ்புக்' வாயிலாக பல லட்சம் சுருட்டல்: வேலையில்லாத வாலிபர்கள் புது 'டெக்னிக்'
ADDED : ஜூன் 04, 2024 02:08 AM

சென்னை: 'பேஸ்புக்' வாயிலாக வலை விரித்து, 'ஆன்லைன் டிரேடிங்' விளம்பரம் செய்து, தெலுங்கானா, கேரளா, மேற்கு வங்க மாநிலங்களை சேர்ந்தவர்களிடம் பல லட்சம் ரூபாய் பறித்த வாலிபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
சென்னை மயிலாப்பூரை சேர்ந்தவர் என்.வி.எல்.என்.பிரசாத்; ஓய்வுபெற்ற மத்திய அரசு அதிகாரி. இவரது, 'பேஸ்புக்' பக்கத்திற்கு, 'ஆன்லைன் டிரேடிங்' தொடர்பாக, விளம்பரம் ஒன்றை மர்ம நபர்கள் அனுப்பி உள்ளனர்.
இவரை, 'வாட்ஸாப்' வாயிலாகவும் தொடர்பு கொண்டு, தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால், குறுகிய காலத்தில் கோடீஸ்வரர் ஆகலாம் என, மூளைச்சலவை செய்து, ஆன்லைன் வாயிலாக 7 லட்சம் ரூபாய் பறித்துள்ளனர்.
இது தொடர்பாக, சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில், பிரசாத் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரித்து திருப்பூரைச் சேர்ந்த ஜீவா, 26; திருவண்ணாமலையைச் சேர்ந்த சக்திவேல், 32, ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
போலீசாரிடம் ஜீவா அளித்துள்ள வாக்குமூலம்:
நானும், சக்திவேலும் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்கு விண்ணப்பித்து இருந்தோம். நேர்முக தேர்வின் போது சந்தித்தோம். இருவரும், 'வாட்ஸாப்' எண்களை பகிர்ந்தோம். எங்களுக்கு வேலை கிடைக்கவில்லை. இனி வேலை தேடும் முயற்சியில் ஈடுபடுவது இல்லை என்ற முடிவுக்கு வந்தோம்.
பணம் சம்பாதிக்க, சமூக வலைதளமான, 'பேஸ்புக்' பக்கங்களே மூலதனம் என்று தீர்மானித்தோம். 'ஆன்லைன் டிரேடிங்' தொடர்பாக விதவிதமான விளம்பரங்களை பதிவு செய்தோம். எங்களிடம் சிக்குவோரை மூளைச்சலவை செய்வோம்.
முதலீடு செய்யும் தொகைக்கு 10 சதவீதம் வட்டி என, வாரந்தோறும் அதற்கான தொகையை அனுப்பி வைப்போம்.
பணம் வருவதால், பலர் எங்களை அறிமுகம் செய்து வைத்தனர். அவர்களில் ஓய்வு பெற்ற மத்திய, மாநில அரசு அதிகாரிகளே அதிகம்.
எங்கள் வலையில் தெலுங்கானா, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகளும் விழுந்தனர்.
மோசடி தொகையை, ஒரே வங்கி கணக்கிற்கு அனுப்ப சொன்னால் மாட்டிக் கொள்வோம் என்பதால், எங்களுக்காக தங்கள் ஆவணங்களை பயன்படுத்தி, வங்கி கணக்கு துவக்கி, அதன் வாயிலாக மோசடி தொகையை பெற்றுத் தருவோருக்கு, வாரம் 5,000 ரூபாய் தருவோம்.
இதனால், நாட்டின் பல மாநிலங்களில் இருந்து, பல லட்சம் ரூபாயை சுருட்டினோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.