நில வழிகாட்டி மதிப்பு 70% வரை உயர்கிறது பத்திரப்பதிவு கட்டணம் கடுமையாக எகிறும்
நில வழிகாட்டி மதிப்பு 70% வரை உயர்கிறது பத்திரப்பதிவு கட்டணம் கடுமையாக எகிறும்
ADDED : மே 10, 2024 11:55 PM
சென்னை:தமிழகத்தில் நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்புகளை, 70 சதவீதம் வரை உயர்த்தும் பணியை பதிவுத்துறை முடுக்கி விட்டுள்ளது.
தமிழகத்தில் நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்புகள், 2012ல் சீரமைக்கப்பட்டன. இதில் வகைபாடு ரீதியாக பல்வேறு குளறுபடிகள் காணப்பட்டதால், பத்திரப்பதிவு பணிகள் முடங்கின.
இதையடுத்து, 2012ல் நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்புகளில், ஒட்டுமொத்தமாக, 33 சதவீதத்தை குறைத்து, 2017ல் அரசு உத்தரவிட்டது.
வழக்கு
இந்நிலையில், 2017ல் பிறப்பித்த உத்தரவை விடுத்து, 2012ல் இருந்த வழிகாட்டி மதிப்புகளை அமல்படுத்தப் போவதாக பதிவுத்துறை, 2023ல் அறிவித்தது. இந்த உத்தரவை எதிர்த்து, பல்வேறு தரப்பினரும் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பதிவுத் துறை, 2023ல் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது. இதனால், 2017 நிலவரப்படியான வழிகாட்டி மதிப்புகளை, கடைப்பிடிக்க வேண்டிய கட்டாய சூழல் பதிவுத் துறைக்கு ஏற்பட்டுஉள்ளது.
ஒரு சில சார் - பதிவாளர்கள் மீதான, நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் பதிவுத்துறைக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளன. இது தொடர்பான வழக்கு ஜூன் மாதம் முதல் வாரத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், பதிவுத் துறை சில முக்கிய முடிவு களை எடுத்துள்ளது.
இதுகுறித்து, சார் - பதிவாளர்கள் கூறியதாவது:
உயர் நீதிமன்ற நெருக்கடியால், நில வழிகாட்டி மதிப்புகளை தற்காலிக ஏற்பாடாக மாற்றி அமைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக கிராம வாரியாக தெருக்களின் விபரம் திரட்டப்பட்டு, அதற்கான மதிப்பு நிர்ணயிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு நிர்ணயிக்கப்படும் மதிப்பு விபரங்களுக்கு, கலெக்டர் தலைமையிலான மாவட்ட மதிப்பு நிர்ணயக் குழுவின் ஒப்புதல் பெற நடவடிக்கை எடுத்து வருகிறோம். மே 15க்குள் மாவட்ட குழு ஒப்புதல் பெற கெடு விதிக்கப்பட்டு உள்ளது.
அதன்பின், இம்மாத இறுதியில், மாநில அளவிலான மையக்குழுவிடம் ஒப்புதல் பெற திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவின்படி, 2012ம் ஆண்டு மதிப்புகளை அமல்படுத்தும் உத்தரவு, இம்மாத இறுதியில் திரும்ப பெறப்படும்.
அழுத்தம்
அதைத் தொடர்ந்து, 2017ல் குறைக்கப்பட்ட வழிகாட்டி மதிப்புகளை சமீபத்திய மாற்றங்களுடன் அமல்படுத்த பதிவுத்துறை திட்டமிட்டுள்ளது. இதனால், தற்போதைய நிலவரத்தில் இருந்து, 70 சதவீதத்துக்கு மேல் புதிய வழிகாட்டி மதிப்புகள் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளன.
தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வரும் முன், இந்த பணிகளை முடிக்க உயரதிகாரிகள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.