ADDED : ஆக 18, 2024 01:20 AM
சென்னை:சென்னை, டி.எம்.எஸ்., வளாகத்தில் கர்ப்பிணியருக்கான, '102' என்ற எண்ணில் செயல்படும் மருத்துவ சேவை மையத்தை, அமைச்சர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.
பின், அவர் அளித்த பேட்டி:
இந்த சேவை மையத்தில், 50 ஆலோசகர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். ஒரு கர்ப்பிணியை, குறைந்தது ஐந்து முறைக்கு மேல், ஆலோசகர்கள் தொடர்பு கொள்வர். அனைவரிடமும் உடல்நலம், சிகிச்சை விபரம் பெறப்படும்.
அதன் வாயிலாக, கிராம மற்றும் வட்டார சுகாதார செவிலியர்கள், கர்ப்பிணியர் முறையாக மருந்து, மாத்திரைகளை உட்கொள்கின்றனரா என்பதை உறுதி செய்வர். அப்போது தான், இத்திட்டம், 100 சதவீதம் முழுமை பெறும். அவ்வாறு அழைப்பை எடுக்காத கர்ப்பிணியர்கள் குறித்த விபரம், மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டு, மேல் நடவடிக்கைக்கு அனுப்பப்படும்.
தமிழகத்தில் ஒரு லட்சம் பிரசவங்களில், 45.5 ஆக உயிரிழப்பு உள்ளது. எனவே, உயிரிழப்பை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதன்படி, கர்ப்பம் தரித்து, ஆறு மாதங்கள் வரை உள்ள, 3 லட்சம் பேர் கண்காணிக்கப்பட உள்ளனர். அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்படும்.
தமிழகத்தில் காலியாக உள்ள, 13 மருத்துவ கல்லுாரிகளிலும், பொறுப்பு முதல்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது, 26 பேராசிரியர்களுக்கு முதல்வர் அந்தஸ்து வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

