'டைப் 1' நீரிழிவு நோயை கட்டுப்படுத்த வழிகாட்டும் இணையதள பதிவேடு துவக்கம்
'டைப் 1' நீரிழிவு நோயை கட்டுப்படுத்த வழிகாட்டும் இணையதள பதிவேடு துவக்கம்
ADDED : ஆக 15, 2024 12:39 AM
சென்னை:''டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவர்கள் அதிகம் இருக்கும் நாடாக, இந்தியா இருப்பது வருத்தம் அளிக்கிறது,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.
அமைச்சர் கூறியதாவது:
இந்தியாவிலேயே முதன்முறையாக மாநில அளவிலான முதல் வகை நீரிழிவு நோய்க்கான இணையதள பதிவேட்டை தமிழகம் துவங்கி உள்ளது.
இணையதள பதிவேட்டின் நோக்கம் என்பது, அவர்களது சுகாதார நலனை கவனித்து சிகிச்சை அளிப்பதும், அவர்களின் வாழ்வாதாரம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை கண்காணிப்பதாகும்.
முதல் வகை நீரிழிவு நோயால், உடலில் இன்சுலின் உற்பத்தி குறைவு ஏற்பட்டு, கணையத்தை பாதிக்கிறது.
ரத்தத்தின் சர்க்கரை அளவை பராமரிக்க, இன்சுலின் ஒரே வழியாக இருக்கிறது. முதல் வகை நீரிழிவு நோய் என்பது பெரும்பாலும், குழந்தைகளையும், வளரிளம் மற்றும் இளம் வயதினரையும் பாதிக்கிறது.
அனைத்து வயதினரையும் பாதிக்கும், டைப் 1 நீரிழிவு நோய்க்கு, இன்சுலின் சிகிச்சை முறையாக அளிக்கப்படவில்லை என்றால், தீவிர பாதிப்புகள் ஏற்படும். இதனால், சிறுநீரகங்கள், நரம்புகள், கண் போன்ற உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன.
முதல் வகை நீரிழிவு நோயால், குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் அதிகமாக பாதிக்கக்கூடிய நாடாக, இந்தியா இருப்பது வருத்தம் அளிக்கிறது.
10 வயதில் ஒரு இந்தியர் முதல் வகை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டால், அவரது சராசரி வாழ்க்கை 32 ஆண்டுகளாக உள்ளது.
அதேநேரம், வளர்ந்த நாடுகளில் முதல் வகை நீரிழிவு நோயால் வாழ்பவர்களின் காலம், 70 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது. உணவு முறை, தீவிர உடற்பயிற்சி இருந்தால் நீரிழிவு நோய் பற்றி பயப்பட வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.