அடிப்படை மாற்றம் கொண்ட தலைவர்கள் தேவை! பா.ஜ., அண்ணாமலை பேச்சு
அடிப்படை மாற்றம் கொண்ட தலைவர்கள் தேவை! பா.ஜ., அண்ணாமலை பேச்சு
UPDATED : ஆக 20, 2024 08:27 PM
ADDED : ஆக 20, 2024 08:22 PM

பல்லடம்:''இந்தியா நன்றாக இருக்க வேண்டும் எனில், அடிப்படை மாற்றம் கொண்ட தலைவர்கள் தேவை,'' என, பல்லடம் அருகே நடந்த விழாவில், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் - அருள்புரத்தில், 'வீ தி லீடர்ஸ்' அறக்கட்டளையை துவக்கி வைத்து அண்ணாமலை பேசியதாவது:
காமராஜர் காலத்தில் இருந்து இன்று வரை, 24 லட்சம் ஹெக்டர் விவசாய நிலப்பரப்பு குறைந்துள்ளது. தமிழகத்தில் உற்பத்தியாகும் நதி என, எதுவும் இல்லை. பிரதான ஆறுகளில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் வருகிறது. கிளை நதிகள் என்பது காணாமலேயே போய் விட்டன.
தமிழகத்தில், கோவை, தேனி மாவட்டங்களை தவிர, மற்ற பகுதிகளில் தண்ணீர் பிரச்னை ஏற்படக்கூடும் என, கூறப்படுகிறது. இதற்கு தீர்வு மரங்கள் நட வேண்டும் என்பதால், ஒவ்வொருவரும் தங்களுடைய அம்மா பெயரில் மரம் நட வேண்டும் என, பிரதமர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
தண்ணீர் இல்லாத மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது. எல்லாமே அரசியல் ஆகி வருகிறது. நீர் மேலாண்மையை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்க வேண்டியது அவசியம். ஒவ்வொரு தனி மனிதனும் சமூக பாதுகாவலராக மாற வேண்டும்.
நமக்குள் இருந்த வேற்றுமையில் ஒற்றுமை என்பது மாறி, இன்று, வேற்றுமை அதிகரித்து உள்ளது. கத்தி சண்டை போடுவது போல் அரசியல் கட்சியினர் சண்டை போடுகின்றனர். வேற்றுமையில் ஒற்றுமை ஏற்படுத்துவது அறக்கட்டளைகளின் கடமை. சட்ட திட்டங்கள் மீது எப்போது மனிதர்களுக்கு மரியாதை வருகிறதோ, அப்போது சமுதாயம் முன்னேறி வருகிறது என்று அர்த்தம்.
இந்தியா நன்றாக இருக்க வேண்டும் எனில், ஒருமித்த எண்ணம் கொண்ட, அடிப்படையில் மாற்றத்தை உருவாக்கக்கூடிய தலைவர்கள் உருவாக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆனைமலையாறு- - நல்லாறு திட்டம் விவசாயிகளிடம் உறுதி
கேரள அரசுடன்
ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி ஆனைமலை-யாறு - நல்லாறு திட்டம்
நிறைவேற்றப்படவில்லை. இதை நிறைவேற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. வழக்கமாக,
மாநில அரசுதான் இதை செயல்படுத்த வேண்டும். நாங்கள் ஏற்கனவே கொடுத்த
வாக்குறுதிபடி, மத்திய அரசே இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான முயற்சியை
கையில் எடுத்துள்ளது.
இத்திட்டத்தை நிச்சயம் நிறைவேற்றி காட்டுவோம் என, விவசாயிகளிடம் உறுதி அளிக்கிறேன்.
தமிழகத்துக்கு
செய்த பணிகளுக்காக, சாதாரண விவசாயி மகனாக, கருணாநிதியின் நினைவிடத்தில்
கும்பிடு போடுவதை பெருமையாகவே கருதுகிறேன். ஆனால், சசிகலா முன்னிலையில்
கூனி குறுகியபடி நின்று, காலில் விழுந்த முன்னாள் அமைச்சர் உதயகுமார், இதை
தவறாக பேசி வருகிறார். ஒருவருக்கு கும்பிடு போடுவது தவறல்ல; காலில் விழுவது
தான் தவறு.
தமிழக அரசின் செயல்பாடுகள் மோசமாக இருந்தாலும்,
இங்குள்ள தொழில்களை அண்டை மாநிலத்துக்கு எடுத்துச்செல்ல விருப்பம்
இல்லாததால், ம.பி., முதல்வர் கோவை வந்ததை புறக்கணித்தேன்.
அண்ணாமலை, தலைவர், தமிழக பா.ஜ.,

