டாக்டர் பரிந்துரையின்றி மாத்திரை 106 மருந்தகங்களின் உரிமம் ரத்து
டாக்டர் பரிந்துரையின்றி மாத்திரை 106 மருந்தகங்களின் உரிமம் ரத்து
ADDED : ஜூலை 26, 2024 08:05 PM
சென்னை:தமிழகத்தில், டாக்டர் பரிந்துரையின்றி மாத்திரை விற்பனை செய்த, 106 மருந்தகங்களில் உரிமம், தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.
நோயாளிகள் பயன்படுத்தும் மருந்து, மாத்திரை உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் மருந்தகங்கள், டாக்டர் பரிந்துரை சீட்டு வழங்கினால் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். சுயமாக தாங்களாகவே மருந்து, மாத்திரைகளை நேரடியாக பொதுமக்களுக்கு வழங்கக்கூடாது.
விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு மருந்து, மாத்திரைக்கும், 'விற்பனை ரசீது' வழங்க வேண்டும். இவற்றை, மாநில மருந்து கட்டுப்பாட்டு மற்றும் உரிமம் வழங்கும் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
அதன்படி, ஏப்., 1 முதல் இதுவரை நடந்த சோதனையில், விதிமீறலில் ஈடுபட்ட, 83 சில்லரை மருந்தகங்கள், 23 மொத்த மருந்தகங்கள் என, 106 மருந்தகங்களின்  உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாநில மருந்து அதிகார கட்டுப்பாட்டாளர் எம்.என்.ஸ்ரீதர் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள, 30,000க்கும் மேற்பட்ட மருந்தகங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அதில், விதிமீறல் கண்டறியப்பட்டால், உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. டாக்டர் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து விற்பனை செய்தல்; விற்பனை ரசீது வழங்காதது; விதிகளை மீறி கருத்தடை மாத்திரை மற்றும் துாக்க மாத்திரை வழங்கியது போன்றவற்றால், 106 கடைகளின் உரிம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.
கருத்தடை மாத்திரை விற்பனை செய்த எட்டு கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதில், திருப்பூரில் மூன்று கடைகள் மூடப்பட்டு உள்ளன. இதுபோன்ற விதிமீறல்கள், விழுப்புரம், மதுரை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகம் உள்ளது. அம்மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

