கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் சிறை புதிய சட்ட மசோதா நிறைவேற்றம்
கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் சிறை புதிய சட்ட மசோதா நிறைவேற்றம்
ADDED : ஜூன் 30, 2024 12:47 AM
கள்ளக்குறிச்சி சம்பவத்தை தொடர்ந்து, கள்ளச்சாராயம் விற்போருக்கு கடுமையான தண்டனைவிதிக்க, தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக, 2024ம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதாவை, அமைச்சர் முத்து சாமி நேற்று தாக்கல் செய்தார். இந்த சட்ட மசோதா ஒருமனதாக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
ஏற்கனவே அமலில் உள்ள, 1937ம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தில், சில விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிப்பது அவசியம். அதற்காக கள்ளச்சாராயம் விற்பனை செய்வோருக்கு அளிக்கப்படும் தண்டனையை அதிகரிப்பதற்காக, இந்த புதிய சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
இப்புதிய சட்டத்தின்படி, மது வகை அல்லது மதி மயக்கும் மருந்தை தயாரிக்க, கொண்டு செல்ல, வைத்திருக்க மற்றும் நுகர்வுக்கு தடை விதிக்கப்படுகிறது. இச்செயல்கள் நடக்க அனுமதிக்கும் கட்டடத்தின் உரிமையாளர் அல்லது பொறுப்பாளருக்கு, முன்னர் மூன்று ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறை தண்டனை, 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்க வழி செய்யப்பட்டிருந்தது.
புதிய சட்ட மசோதா, ஏழு ஆண்டு கள் வரை சிறை தண்டனை, 3 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க வழி செய்கிறது.
கள்ளச்சாராயம் அருந்துவதால் மரணம் ஏற்பட்டால், ஆயுள் தண்டனை மற்றும் 5,000 ரூபாய்க்கு குறையாத அபராதம் விதிக்க, முன்னர் வழிவகை செய்யப்பட்டிருந்தது. புதிய சட்டம், ஆயுள் தண்டனை மற்றும் 10 லட்சம் ரூபாய்க்கு குறையாத அபராதம் விதிக்க வழி செய்கிறது.
பிற நிகழ்வில் 10 ஆண்டுகள் வரை சிறை, 7,000 ரூபாய் அபராதம் என்பது, புதிய சட்டத்தின்படி 10 ஆண்டுகள் வரை சிறை, 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
மது அல்லது போதை மருந்து ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும் என்றோ அல்லது விற்பனைக்கு அளிப்பதாகவோ விளம்பரம் செய்தால், பிரசுரித்தால், அந்த நபருக்கு ஐந்து ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனையுடன், 2 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
இச்சட்டத்தில் உள்ள விதிகளின்படி, உரிமம் பெறாமல் எந்த இடத்திலும் மது அருந்த அனுமதித்தல் கூடாது. அவ்வாறு அனுமதிக்கப்பட்டால், அந்த இடத்தை தாசில்தார் நிலைக்கு குறையாத அலுவலர் மூடி முத்திரையிட வேண்டும். சம்பந்தப்பட்டவர் 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம்.
இவ்வாறு புதிய சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

