'போக்சோ' வழக்கில் விதிக்கப்பட்ட இருவரின் ஆயுள் தண்டனை ரத்து
'போக்சோ' வழக்கில் விதிக்கப்பட்ட இருவரின் ஆயுள் தண்டனை ரத்து
ADDED : ஜூன் 24, 2024 05:21 AM
சென்னை : திருப்பூர் மாவட்டம் சந்தைப்பேட்டைக்கு தன் ஆண் நண்பருடன், 14 வயது சிறுமி 2017 மார்ச் 9ல் சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த சேதுபதி, காளிமுத்து ஆகியோர், சிறுமியுடன் வந்த வாலிபரை தாக்கிவிட்டு, சிறுமியை அருகில் உள்ள சோளக்கொல்லைக்கு துாக்கிச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
சிறுமி அளித்த புகாரில், இந்திய தண்டனை சட்டம் மற்றும் 'போக்சோ' சட்டப் பிரிவுகளின் கீழ், தாராபுரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து, இருவரையும் கைது செய்தனர்.
இச்சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த திருப்பூர் மகளிர் சிறப்பு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சேதுபதி மற்றும் காளிமுத்துவுக்கு ஆயுள் தண்டனை விதித்து, 2019 மார்ச் 28ல் தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் காளிமுத்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் அடங்கிய அமர்வு விசாரித்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
சாட்சியங்களை ஒட்டு மொத்தமாக படிக்கும் போது, போலீசாரின் வழக்கு விசாரணை மிகவும் சந்தேகத்துக்கு உரியதாக உள்ளது. காலதாமதமாக புகார் அளித்ததும், போலீசார் எப்.ஐ.ஆர்.,யை தாமதமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததும், சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
இரவு நேரத்தில் குற்றச் சம்பவம் நடந்துள்ளது. வழக்கில், அடையாள அணிவகுப்பு எதுவும் நடத்தப்படவில்லை.
முக்கிய சாட்சியான பாதிக்கப்பட்ட சிறுமி, முன்னுக்கு பின் முரணாக சாட்சியம் அளித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் பெயரை, பாதிக்கப்பட்ட சிறுமி தான் தெரிவித்தாரா என்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இந்த வழக்கை போலீசார் முறையாக விசாரிக்கவில்லை என் பதால், தண்டனை விதிப்பது சரியாக இருக்காது.
எனவே, திருப்பூர் மகளிர் சிறப்பு நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனை ரத்து செய்யப்படுகிறது.
வேறு வழக்குகளில் தொடர்பு இல்லை எனில், காளிமுத்துவை உடனே விடுதலை செய்ய வேண்டும். அது மட்டுமின்றி, முதல் குற்றவாளி மேல்முறையீடு செய்யாவிட்டாலும், அவரும் விடுதலை செய்யப்படுகிறார்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.