ஆயுள் கைதி சித்ரவதை புகார்: பெண் டி.ஐ.ஜி.,யிடம் விசாரணை
ஆயுள் கைதி சித்ரவதை புகார்: பெண் டி.ஐ.ஜி.,யிடம் விசாரணை
ADDED : செப் 09, 2024 06:08 AM
சென்னை : ஆயுள் தண்டனை கைதியை, வீட்டு வேலை செய்யச்சொல்லி சித்ரவதை செய்தது தொடர்பாக, டி.ஐ.ஜி., ராஜலட்சுமியிடம், சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் மாணிக்கம்கோட்டையை சேர்ந்தவர் சிவகுமார், 30. இவர், கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, வேலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
இவரை, வேலுார் சரக சிறைத்துறை டி.ஐ.ஜி., ராஜலட்சுமி, வீட்டு வேலை செய்யச்சொல்லி சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.
மேலும், சிவகுமார் தன் வீட்டில் இருந்த, 4.25 லட்சம் ரூபாய் மற்றும் வெள்ளி பொருட்களை திருடி விட்டார் என்றும், ராஜலட்சுமி குற்றம் சாட்டினார்.
இதுதொடர்பாக, ராஜலட்சுமி மற்றும் வேலுார் மத்திய சிறை கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல் ரஹ்மான், பெண் போலீஸ் சரஸ்வதி உட்பட 14 பேர், சிவகுமாரை விசாரணை என்ற பெயரில் அடித்து துன்புறுத்தி உள்ளனர்.
இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவகுமாரின் தாய் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின்படி, வேலுார் முதன்மை குற்றவியல் நீதிபதி, சிறைக்கு சென்று சிவகுமாரிடம் வாக்குமூலம் பெற்றார்.
அப்போது, அவர் அளித்த புகாரின்படி, ராஜலட்சுமி உள்ளிட்ட, 14 பேர் மீது, சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பின், அவர் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
தற்போது, வழக்கில் சிக்கியுள்ள ராஜலட்சுமியிடம், சி.பி.சி.ஐ.டி., அதிகாரிகள் விசாரணையை துவக்கி உள்ளனர்.
ஆயுள் தண்டனை கைதியை, தன் வீட்டு வேலைக்கு அமர்த்தியது ஏன், அதற்கு உத்தரவு போட்டது யார் என்பது குறித்து கேட்டு உள்ளனர்.
அப்போது, 'கைதி சிவகுமார், என் வீட்டில் இருந்து, 4.25 லட்சம் ரூபாய் மற்றும் வெள்ளி நகைகளை திருடியது உண்மை. அவற்றை எங்கள் வீட்டு தோட்டத்தில் புதைத்து வைத்து இருந்தார். அதை, அவரே எடுத்தும் கொடுத்தார்.
அவரிடம் விசாரணை தான் நடத்தப்பட்டது; அடித்து துன்புறுத்தவில்லை; சித்ரவதையும் செய்யவில்லை' என, சி.பி.சி.ஐ.டி., அதிகாரிகளிடம் ராஜலட்சுமி கூறியுள்ளார்.
வழக்கில் சிக்கியுள்ள மற்றவர்களிடமும் விசாரணை நடக்க உள்ளது. அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிகிறது.