ADDED : மார் 06, 2025 01:21 AM
சென்னை: கால்நடை கணக்கெடுப்பு செயலியில், ஒரு மாதமாக, 'நெட்வொர்க்' பிரச்னை ஏற்பட்டுள்ளதால், கால்நடை கணக்கெடுப்பு பணியில், தாமதம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு கால்நடைத் துறை சார்பில், 21வது கால்நடை கணக்கெடுப்பு பணி, கடந்த, அக்.,25ல் துவங்கியது. கடந்த பிப்., மாதம் பணியை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பணி இன்னமும் நிறைவடையவில்லை.
இது குறித்து, கால்நடைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
கால்நடை கணக்கெடுப்பு பணியில், இதுவரை, 88 சதவீத பணிகள் நிறைவடைந்து உள்ளன; மீதம் 12 சதவீதம் உள்ளது.
கணக்கெடுப்பு பணிக்காக, '21வது லைவ் ஸ்டாக் சென்சஸ்' எனும் மொபைல் செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுதும், 6,191 கால்நடை கணக்கெடுப்பாளர்கள், இந்த செயலியை பயன்படுத்தி, கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பணியின்போது செயலியில், அவ்வப்போது 'நெட்வொர்க்' பிரச்னை ஏற்படுகிறது. நாடு முழுதும், இந்த செயலியை பயன்படுத்துவதால், சில நேரம் பதிவேற்றம் செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது.
இதனால், ஒரு மாதமாக, கணக்கெடுப்பு பணி பாதிக்கப்பட்டு உள்ளது.
திட்டமிட்டபடி பணியை நிறைவு செய்ய முடியாததால், கணக்கெடுப்பு பணிக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் கணக்கெடுப்பு பணி நிறைவடையும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.