ADDED : மார் 22, 2024 01:22 AM
சென்னை,:''தமிழகத்தில் பா.ஜ., வேட்பாளர்கள், 20 தொகுதிகளிலும்; பா.ஜ.,வின் சின்னத்தில், கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நான்கு வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை, கமலாலயத்தில் அளித்த பேட்டி:
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில், கூட்டணி கட்சிகளுக்கு 39 தொகுதிகளுக்கான பங்கீடு முடிந்திருக்கிறது. பா.ஜ., வேட்பாளர்கள், 20 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். பா.ஜ.,வின் சின்னத்தில், கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நான்கு வேட்பாளர்கள் போட்டியிடுவர்.
பா.ஜ., வேட்பாளர்கள் பட்டியலுடன் டில்லி செல்கிறோம். இந்த பட்டியலை, பா.ஜ., பார்லிமென்ட் குழு முறைப்படி அறிவிக்கும். கூட்டணி கட்சிகள் இடையில் சுமுகமாக, திருப்திகரமாக, மரியாதையாக தொகுதி பங்கீடு முடிந்திருக்கிறது.
யாரையும் நெருக்கி பா.ஜ., வளர வேண்டிய அவசியமில்லை. எல்லா கட்சிகளும் வளர வேண்டும். திராவிட அரசியலுக்கு மாறுபட்ட அரசியலை பா.ஜ., முன்னெடுக்கும். இதற்கான முதல் காலடியாக லோக்சபா தேர்தல் இருக்கும்.
தமிழக மக்கள், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்கு மிகப்பெரிய ஆதரவை வழங்குவர். எப்போது வேண்டுமானாலும் வேட்பாளர் பட்டியலை எதிர்பார்க்கலாம். பன்னீர்செல்வம் தன் முடிவை அறிவிப்பார். அவர் முடிவை அறிவித்ததும், பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்படும்.
பிரதமர் மோடி, 400 எம்.பி.,க்கள் உடன் மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமராக பொறுப்பேற்பார். அதில், தமிழகத்தில் பா.ஜ., கூட்டணி கட்சிகளின் 39 எம்.பி.,க்களும் இருப்பர்.
இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

