உற்பத்தி குறைவு; விலை உயர்வு உருளைக்கிழங்கு கிலோ ரூ.50
உற்பத்தி குறைவு; விலை உயர்வு உருளைக்கிழங்கு கிலோ ரூ.50
ADDED : ஆக 02, 2024 01:27 AM

சென்னை:உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில், உருளை கிழங்கு உற்பத்தி குறைந்துள்ளதால், அதன் விலை வேகமாக உயர்ந்து வருகிறது.
உத்தர பிரதேசம், மேற்கு வங்க மாநிலங்களில் உருளைக்கிழங்கு சாகுபடி அதிகளவில் நடக்கிறது. மத்திய பிரதேசம், குஜராத், ஹிமாச்சல பிரதேசம், பஞ்சாப், கர்நாடகா, அசாம், தமிழகம் உள்ளிட்ட 20 மாநிலங்களிலும் உருளை கிழங்கு விளைகிறது.
உலகின் உருளைக் கிழங்கு உற்பத்தியில் சீனாவிற்கு அடுத்து, இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது.
இந்தியாவில் உற்பத்தியாகும் உருளை கிழங்கு, நேபாளம், சவுதி அரேபியா, மலேஷியா, இந்தோனேஷியா, ஓமன் உட்பட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. ஆண்டுதோறும், 49 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு, 4.40 கோடி டன் உருளை கிழங்கு உற்பத்தியாகிறது.
நடப்பாண்டு, உத்தர பிரதேசம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் உருளைக்கிழங்கு சாகுபடி குறைந்துள்ளது.
மழையால் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. புதிதாக உருளைக்கிழங்கு நடவு பணி நடந்து வருகிறது. கையிருப்பில் உள்ள முதல் தரமான உருளை கிழங்குகள் ஏற்றுமதியாகி வருகின்றன.
இதனால், இரண்டாம்மற்றும் மூன்றாம் தர உருளைக்கிழங்குகள் மட்டுமே சந்தைக்கு வருகின்றன. தேவை அதிகம் உள்ளதால், விலை உயர்ந்து வருகிறது.
சென்னை கோயம்பேடு சந்தையில், ஜூனில் கிலோ 20 ரூபாய்க்கு விற்கப்பட்ட இரண்டாம் தர உருளைக்கிழங்கு தற்போது, 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சில்லரை விலையில் கிலோ 60 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
உருளை கிழக்கு 75 முதல், 120 நாட்களில் அறுவடைக்கு வரும். எனவே, விலை குறைவதற்கு இன்னும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.