ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறை உறுதி செய்தது சென்னை ஐகோர்ட்
ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறை உறுதி செய்தது சென்னை ஐகோர்ட்
ADDED : மார் 14, 2025 10:31 PM
சென்னை:வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக நிதி பெற்றதற்காக, பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ.,வும், மனிதநேய மக்கள் கட்சி நிறுவனருமான ஜவாஹிருல்லாவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை, சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியிடம் எவ்வித அனுமதியும் பெறாமல், கடந்த 1997 முதல் 2000ம் ஆண்டு வரை வெளிநாடுகளில் இருந்து, சட்ட விரோதமாக ஒரு கோடி, 54 லட்சத்து, 88,508 ரூபாயை பெற்றதாக, ஜவாஹிருல்லா, ஹைதர்அலி, சையது நிசார் அகமது, ஜி.எம்.சேக், நல்லா முகமது களஞ்சியம் ஆகியோர் மீது, எப்.சி.ஆர்.ஏ., எனும் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்ட பிரிவுகளில், 2001ல் சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த எழும்பூர் கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றம், ஜவாஹிருல்லா, ஹைதர் அலி ஆகியோருக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை மற்றும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம்;, சையது நிசார் அகமது, ஜி.எம்.சேக், நல்லா முகமது களஞ்சியம் ஆகியோருக்கு, தலா இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, கடந்த 2011ல் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து, சென்னை மாவட்ட 6வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் அனைவரும் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீடு வழக்கை தள்ளுபடி செய்த மாவட்ட அமர்வு நீதிமன்றம், கீழமை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை, 2017ல் உறுதி செய்தது.
இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், ஐந்து பேரும் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதிபதி என்.சதீஷ்குமார், 'ஐந்து பேரும் கீழமை நீதிமன்றத்தில் சரண் அடைய வேண்டும்' என உத்தரவிட்டார். அதன்படி, ஐந்து பேரும் சரணடைந்தனர்.
இதையடுத்து, கீழமை நீதிமன்றத்தில் வழங்கிய தண்டனையை நிறுத்தி வைத்து, 2017ம் ஆண்டு ஜூன் 30-ல் உத்தரவிட்டார். பின், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன் பிறப்பித்த உத்தரவு:
இந்த நீதிமன்றம், மாஜிஸ்திரேட் மற்றும் மாவட்ட அமர்வு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில், எவ்வித சட்ட விரோதத்தையோ அல்லது குறைபாட்டையோ காண முடியவில்லை. எனவே, இந்த மறு ஆய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 'ரமலான் காலம் என்பதால் மனுதாரர்கள் நோன்பு இருக்கின்றனர். மேல்முறையீடு செய்ய வசதியாக, இந்த தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும்' என கோரிக்கை விடுத்தனர்.
இதை ஏற்ற நீதிபதி பி.வேல்முருகன், 'இந்த தீர்ப்பை 30 நாட்களுக்கு நிறுத்தி வைக்கிறேன். அதற்குள் மனுதாரர்கள் மேல்முறையீடு செய்ய வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால், விசாரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை மனுதாரர்கள் அனுபவிக்கும் விதமாக, அவர்களை சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சி.பி.ஐ.,க்கு உத்தரவிட்டார்.