சமூக மாற்றத்திற்கு வித்திடும் உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்புகள்
சமூக மாற்றத்திற்கு வித்திடும் உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்புகள்
UPDATED : ஜூலை 21, 2024 05:14 AM
ADDED : ஜூலை 21, 2024 05:11 AM

மதுரை: ''உயர் நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்புகள் சமூக மாற்றத்திற்கு வித்திடும் வகையில் உள்ளன,'' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் புகழாரம் சூட்டினார்.
மதுரை, தமுக்கத்தில் நடந்த உயர் நீதிமன்ற மதுரை கிளையின் 20வது ஆண்டு நிறைவு விழாவில், உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் வரவேற்றார்.
உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் பேசுகையில், ''சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றினேன். என் பணியை அங்கீகரித்ததன் வாயிலாக தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாகியுள்ளேன்.
![]() |
''சட்டம், நீதியை உயர் நீதிமன்ற கிளை தொடர்ந்து காப்பாற்றும் என்ற நம்பிக்கை உள்ளது,'' என்றார்.
தட்டிக்கேட்கும் மண்
உச்ச நீதிமன்ற நீதிபதி கே.வி.விஸ்வநாதன் பேசியதாவது:
எந்த அநீதியையும் தட்டிக்கேட்கும் மண் மதுரை. அதை சிலப்பதிகாரம் பதிவு செய்துள்ளது. உயர் நீதிமன்ற கிளை முக்கிய தீர்ப்புகளை அளித்து மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது. அந்த வெற்றியை சுய பரிசோதனை செய்ய வேண்டிய நேரம் இது.
குறைகளை சீர்செய்ய நடவடிக்கை எடுப்போம். மதுரை வழக்கறிஞர் சங்கங்கள் வேலைவாய்ப்புக் குழு அமைக்க வேண்டும். இளம் வழக்கறிஞர்களுக்கு மூத்த வழக்கறிஞர்கள் வழிகாட்ட வேண்டும்.
இதனால், திறமையான இளம் வழக்கறிஞர்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை காண்பிக்க முடியும்.
வழக்கறிஞர்களுக்கு தொடர்கல்வியை வழக்கறிஞர் சங்கங்கள் முன்னெடுக்க வேண்டும். இதனால் சிவில், கிரிமினல் சட்டங்களில் நீங்கள் புலமை பெற முடியும். நீதித்துறைக்கு உதவ முடியும்; நல்ல தீர்ப்புகளை வழங்க முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேசியதாவது:
மதுரை, கோவில் மாநகரம். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நகரம். துாங்காநகரம்; அதுபோல் நீதியும் எப்போதும் துாங்குவதில்லை. மதுரையை மீனாட்சி அம்மன் ஆட்சி செய்கிறார். சில மாதங்கள் சுந்தரேஸ்வரர் ஆட்சி செய்கிறார்.
அது தற்போது அரசியலில் பெண்களுக்கு, 33 சதவீதம் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான முன்னோடியாக உள்ளது. 1,500 ஆண்டுகளுக்கு முன்பே முதல் பெண் வழக்கறிஞராக கண்ணகி திகழ்ந்தார். இதை சிலப்பதிகாரம் எடுத்துரைக்கிறது.
உயர் நீதிமன்ற கிளை பல தடைகளைத் தாண்டி பயணத்தை தொடர்கிறது. இங்கு காணொலி விசாரணை, நுாலகம், சமரச தீர்வு மையம் உள்ளிட்ட பல கட்டமைப்பு வசதிகள் உள்ளன. மூன்றாம் பாலினத்தவர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு, தனித்துவமிக்க தீர்ப்புகளை அளித்துள்ளது.
வழக்குகளை விரைந்து விசாரித்து முடிப்பதில் முன்னணியில் உள்ளது. இதன் தீர்ப்புகள், சமூக மாற்றத்திற்கு வித்திடும் வகையில் உள்ளன.
தொழில்நுட்பம்
தொழில்நுட்பத்தால் பயனடைகிறோம். அதேசமயம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்குதளம் முடங்கியதால், அதனால் ஏற்பட்ட சிரமத்தை பொருட்படுத்தவில்லை.
தடைகளைத் தாண்டி இங்கு வந்து சேர வேண்டிய நிலை ஏற்பட்டது. தொழில்நுட்பப் பிரச்னைகளை எதிர்கொண்டு சாதிக்க முயற்சிப்போம். இளம் வழக்கறிஞர்கள், நீண்ட நேரம் கடினமாக உழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், ஆர்.சுப்பிரமணியன், பதிவாளர் ஜெனரல் ஜோதிராமன், உயர் நீதிமன்ற கிளை கூடுதல் பதிவாளர் ஜெனரல் பொறுப்பு வெங்கடவரதன்.
மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ராமன், கலெக்டர் சங்கீதா, வழக்கறிஞர் சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.