எந்த மொழியை யார் படிக்க வேண்டும் என்பதை மாணவர்கள் தீர்மானிக்கட்டும்: மஹாராஷ்டிரா கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன்
எந்த மொழியை யார் படிக்க வேண்டும் என்பதை மாணவர்கள் தீர்மானிக்கட்டும்: மஹாராஷ்டிரா கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன்
ADDED : மார் 10, 2025 05:09 AM

கோவை: ''எந்த மொழியை யார் கற்க வேண்டும் என்பதை, மாணவர்கள் தீர்மானிக்கட்டும்,'' என, மஹாராஷ்டிரா கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க, நேற்று கோவை வந்த கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் தமிழ் மொழி வாயிலாக, கற்க வேண்டும் என்பதை தான், புதிய தேசிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது. தமிழகத்தில் தமிழில் கல்வி கற்பது மறைந்து வருகிறது. அதைத்தடுக்க வேண்டுமானால், புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும்.
மும்மொழி கொள்கையின்படி, மூன்றாவதாக எந்த மொழியை வேண்டுமானாலும் கற்கலாம். ஹிந்தி உட்பட எந்த மொழியும் திணிக்கப்படவில்லை. அதற்காக ஒரு போராட்டம் நடத்த வேண்டிய அவசியமில்லை.
வடமாநிலத்தவர் தமிழைதான் கற்க வேண்டும் என, எப்படி கூற முடியும். இந்தியை கற்க வலியுறுத்த முடியாத அரசு, தமிழை மட்டும் கற்க வேண்டும் என, கூற முடியாது. விரும்புவோருக்கு வடமாநிலத்தில் தமிழை கற்றுத் தர முடியும்.
பிற மொழி வேண்டுமென்றால், அம்மொழி கற்றுத் தரப்படும். தேசிய கல்விக் கொள்கை, அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானதே; தமிழகத்துக்கு மட்டுமல்ல.வட மாநிலத்தவர் தமிழ் கற்க விரும்பினால் கற்றுத்தரப்படும்; திணிக்க முடியாது. யார் மீதும் மொழியை திணிக்க கூடாது என்பதுதான், புதிய தேசிய கல்விக் கொள்கை.
பாலியல் துன்புறுத்தல், தமிழகத்தில் பரவலாக இருந்து வருகிறது. போதைக்கு இளைஞர்கள் அடிமையாவதே இதற்கு காரணம். எனவே, போதை பொருட்களுக்கு எதிராக தமிழக அரசு, கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
மொழி வேண்டாம் என கூறுவதே அரசியல் தான். எந்த மொழியை யார் படிக்க வேண்டும், என்பதை மாணவர்கள் மத்தியில் விட்டுவிட வேண்டும் என்கிறது, புதிய கல்வி கொள்கை.
இவ்வாறு, அவர் கூறினார்.