ADDED : பிப் 24, 2025 05:25 AM
சென்னை: அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் நேற்று அளித்த பேட்டி:
விளையாட்டு வீரர்களுக்கு, அ.தி.மு.க., ஆட்சியில், 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதுபோல், தி.மு.க., அரசு ஏதேனும் செய்துள்ளதா? இதுகுறித்து விவாதம் செய்ய நான் தயார். நான்கு ஆண்டுகளில், விளையாட்டு துறையை மேம்படுத்த, தி.மு.க., செய்ததை உதயநிதி கூறட்டும். அ.தி.மு.க., ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது குறித்து, நான் கூறுகிறேன்.
'கோ பேக் மோடி' என, முதல்வர் ஸ்டாலினும், 'கெட் அவுட் ஸ்டாலின்' என, பா.ஜ.,வினரும் மாறி மாறி, கருத்து பதிவிடுகின்றனர். நாட்டில் எத்தனையோ பிரச்னைகள் உள்ளன. இதை பற்றி பேசாமல், இருவரும் திசை திருப்பும் செயலை செய்து வருகின்றனர்.
முதல்வர் கூறும், 'அப்பா' என்ற உறவு வீணான வில்லங்கம். அரசு பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு கூட இல்லை. தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்த ஒதுக்கீடு செய்யப்பட்ட, 500 கோடி ரூபாய் கிடப்பில் இருப்பது குறித்த செய்தி 'தினமலர்' நாளிதழில் வெளியாகி உள்ளது. அமைச்சர் மகேஷ், உதயநிதிக்கு ரசிகர் மன்றத் தலைவராக இருக்க தகுதியானவர்; பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருக்க தகுதியற்றவர்.
இருமொழிக் கொள்கையில், அ.தி.மு.க., தீவிரமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

