மக்காச்சோளம் சாகுபடி பரப்பு விரிவாக்க திட்டம் : காஞ்சி, திருவள்ளூர், செங்கைக்கு நீட்டிக்கப்படுமா?
மக்காச்சோளம் சாகுபடி பரப்பு விரிவாக்க திட்டம் : காஞ்சி, திருவள்ளூர், செங்கைக்கு நீட்டிக்கப்படுமா?
ADDED : ஜூலை 01, 2024 02:54 AM

சென்னை: மக்காச்சோளம் சாகுபடிபரப்பு விரிவாக்க திட்டத்தை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கும் நீட்டிக்க வேண்டும்என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
நெல், கரும்பு உள்ளிட்ட வேளாண் பயிர்களின் பாசனத்திற்கு அதிக நீர் தேவை. தமிழகத்தில் நீர் பற்றாக்குறை அவ்வப்போது ஏற்படுகிறது. இத்தகைய நேரங்களில், நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள், நஷ்டத்தை எதிர்கொள்கின்றனர்.
எனவே, நீர் தேவை குறைவான பயிர்களை சாகுபடி செய்யும்படி, மத்திய, மாநில அரசுகள் வாயிலாக, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்காக, மாற்று பயிர்கள் சாகுபடி திட்டத்தை வேளாண்துறையும் செயல்படுத்தி வருகிறது. மாற்று பயிர்களை பொறுத்தவரை, மக்காச்சோளம் வாயிலாக விவசாயிகளுக்கு நல்ல வருவாய் கிடைத்து வருகிறது.
கோழி தீவனம், எத்தனால் உட்பட பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க, மக்காச்சோளம் அதிகம் தேவை. அதேநேரம், நாட்டில் மக்காச்சோள உற்பத்தி மிகவும் குறைவாக உள்ளது.
மக்காச்சோளத்தின் தேவை மற்றும் விவசாயிகளின் வருவாயை கருத்தில் கொண்டு, சிறப்பு திட்டத்தை தமிழக வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் சமீபத்தில் சட்டசபையில் அறிவித்தார்.
அதன்படி, சேலம், திருப்பூர், திண்டுக்கல், பெரம்பலுார், துாத்துக்குடி, விருதுநகர், கடலுார், கள்ளக்குறிச்சி, ஈரோடு, விழுப்புரம், நாமக்கல், தர்மபுரி, திருச்சி, அரியலுார், மதுரை, தேனி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய, 18 மாவட்டங்களில், மக்காச்சோள சாகுபடிக்கான சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதற்காக, 30 கோடி ரூபாய் செலவிடவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இத்திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு மக்காச்சோள விதைகள், திர உயிர் உரங்கள், இயற்கை உரம், நானோ யூரியா உள்ளிட்டவை அடங்கிய, 6,000 ரூபாய் மதிப்பிலான தொகுப்புகள், 50,000 விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளன.
இத்திட்டம் வாயிலாக, 1.23 லட்சம்ஏக்கரில், மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுவது உறுதியாகி உள்ளது.
அதேநேரத்தில், இத்திட்டத்தை திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின்திருவள்ளூர் மாவட்ட தலைவர், ஜெ.ஆஞ்சநேயலு கூறியதாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில் பெரும்பாலும், நெல் சாகுபடியில் தான் விவசாயிகள் அதிகம் ஈடுபடுகின்றனர். மக்காச்சோளம் சாகுபடி செய்தால், ஏக்கருக்கு 1 லட்சம் ரூபாய் வரை லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. அந்த அளவிற்கு மக்காச்சோளத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
எனவே, மக்காச்சோள சாகுபடியை ஊக்குவிக்க வேண்டும்; மானியங்களை அதிகளவில் வழங்க வேண்டும் என, கடந்த 27 ம்தேதி நடந்த விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் பிரபு சங்கரிடம் வலியுறுத்தினோம். அதை அவரும் ஏற்றுக்கொண்டார்.
வேளாண்துறை அதிகாரிகளை அழைத்து, விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு அந்தக் கூட்டத்தின் போது அறிவுறுத்தினார்.
ஆனால், நிதி ஆதாரம் இல்லை என்று அதிகாரிகள் சொல்கின்றனர். எனவே, மக்காசோள சாகுபடிக்கான சிறப்பு திட்டத்தை, திருவள்ளூர் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களுக்கும் வேளாண்துறையினர் விரிவாக்கம் செய்யவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.