ADDED : ஜூலை 09, 2024 12:14 AM
சென்னை: மக்காச்சோள சாகுபடியை, 9.39 லட்சம் ஏக்கரில் மேற்கொள்ள, வேளாண் துறையினர் இலக்கு நிர்ணயம் செய்து அதற்கான பணிகளை துவங்கியுள்ளனர்.
தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களிலும் மக்காச்சோளம் தேவை அதிகரித்து வருகிறது. நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்களை காட்டிலும், குறைந்த நீரில் மக்காச்சோளம் உற்பத்தி செய்ய முடியும் என்பதால், பல்வேறு மாவட்டங்களில் சாகுபடி செய்ய உகந்த சூழல் உள்ளது. எனவே நடப்பாண்டு, 18 மாவட்டங்களில், மக்காச்சோளம் சாகுபடியை அதிகரிக்கும் சிறப்பு திட்டம், 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது.
இதற்காக, வீரிய ஒட்டுரக மக்காச்சோள விதைகள், திரவ உயிர் உரங்கள், இயற்கை உரங்கள், நானோ யூரியா உள்ளிட்டவை அடங்கிய, 6,000 ரூபாய் மதிப்பிலான தொகுப்புகள், 50,000 விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளன.
நடப்பாண்டு மக்காச்சோள சாகுபடியை, 9.39 லட்சம் ஏக்கரில் மேற்கொள்ள, வேளாண் துறையினர் இலக்கு நிர்ணயம் செய்துள்ளனர்.
அதிகபட்சமாக பெரம்பலுாரில், 1.34 லட்சம் ஏக்கர், துாத்துக்குடியில் 1.11 லட்சம், விருதுநகரில், 81,510, திண்டுக்கல்லில் 69,160, தென்காசியில் 53,500, திருப்பூரில் 51,376, கடலுாரில் 51,277, மதுரையில் 46,930, அரியலுாரில் 45,695, ஈரோடு 37,050, திருச்சியில் 32,110 ஏக்கரில் சாகுபடிக்கு செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
தற்போதைய நிலவரப்படி, மக்காச்சோள சாகுபடி பரப்பு, 24,947 ஏக்கரை எட்டிஉள்ளது. சாகுபடி பரப்பை அதிகரிப்பதில், கூடுதல் கவனம் செலுத்துமாறு, மாவட்ட வேளாண் இணை இயக்குனர்களுக்கு, வேளாண் துறை செயலர் அபூர்வா, இயக்குனர் முருகேஷ் ஆகியோர் அறிவுறுத்தியுள்ளனர்.

