ADDED : ஜூன் 26, 2024 03:02 AM

நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கத்தில், பெண்ணையாற்றின் குறுக்கே தரைப்பாலம் இருந்தது. மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தால் சாலை துண்டித்து, போக்குவரத்து பாதித்தது.
அதையடுத்து, 20 ஆண்டுகளுக்கு முன்பு, புதிய மேம்பாலம் கட்டப்பட்டு, பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இப்பாலம் வழியாக கடலுார் மாவட்டம் பட்டாம்பாக்கத்தில் இருந்து, விழுப்புரம் மாவட்ட பகுதிகளான சொர்ணாவூர், ராம்பாக்கம், வளவனூர், சிறுவந்தாடு, கலிஞ்சிக்குப்பம் உட்பட பல பகுதி மக்கள் சென்று வருகின்றனர். பஸ்கள் மற்றும் பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றன.
அதேபோல், புதுச்சேரி மாநில பகுதிகளான மடுகரை, கரையாம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் இப்பாலம் வழியாக செல்கின்றனர். நெல்லிக்குப்பம் தனியார் சர்க்கரை ஆலைக்கு, ஆண்டுதோறும் ஒரு லட்சம் டன்னுக்கு மேல் கரும்பு அந்த பாலத்தின் வழியாக பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்படுகிறது.
இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த இந்த பாலத்தை, நெடுஞ்சாலைத்துறையினர் முறையாக பராமரிக்காமல் அலட்சியமாக உள்ளனர்.
இதனால் பாலத்தை தாங்கி நிற்கும் துாண்களின் அடிப்பகுதியில் அரிப்பு ஏற்பட்டு வலுவிழந்து வருகிறது.
வரும் மழை காலத்தில் ஆற்றில் வெள்ளம் வந்தால் இந்த பாலம் தாங்குமா என்ற அச்சம் மக்களிடம் உள்ளது.
இதனால், பாலத்தில் வாகனங்கள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. எனவே, பாலத்திற்கு பாதிப்பு ஏற்படும் முன்பு, சீரமைக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

