ADDED : ஏப் 17, 2024 10:04 PM

சென்னை:உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு, மாமல்லபுரம் சிற்பங்களை இன்று பார்வையாளர்கள் இலவசமாக பார்வையிடலாம் என, மத்திய தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் கடற்கரை கோவில், குடைவரை கோவில்கள், ஒற்றைக்கல் ரதங்கள், புடைப்பு சிற்ப தொகுதிகள் உள்ளிட்ட கலைப் படைப்புகள், நரசிம்மவர்ம பல்லவனால் செதுக்கப்பட்டன. எட்டாம் நுாற்றாண்டின் படைப்புகளான இவை இன்றும் பிரமிக்கும் அழகுடன் உள்ளன.
இயல்பாகவும், நளினமாகவும், கலை நுணுக்கத்துடனும் படைக்கப்பட்ட இவற்றை, உலக பாரம்பரிய சின்னங்களாக, உலக கலாசார அமைப்பான யுனெஸ்கோ அங்கீகரித்துள்ளது. மத்திய தொல்லியல் துறையின் சென்னை வட்டார அலுவலகம், இவற்றை பழமை மாறாமல் பராமரித்து, பாதுகாத்து வருகிறது.
இன்று உலக பாரம்பரிய தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, இங்கு வரும் சுற்றுலா பயணியர் உள்ளிட்ட பார்வையாளர்களுக்கு இன்று இலவச அனுமதி வழங்கப்பட உள்ளது.
மேலும், இந்திய பாரம்பரிய கலைகள் மற்றும் கலாசார அமைப்பு, சர்வதேச மணிமேகலை கலாசார அமைப்பு ஆகியவற்றின் சார்பில், உலக சாதனை நிகழ்ச்சியாக 'நட்சத்திர கலை சங்கமம்' என்ற நாட்டிய நிகழ்ச்சி நடக்க உள்ளது. மாலை 4:30 மணிக்கு நடக்க உள்ள இதில், 100க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற பாரம்பரிய நடனக் கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.

